பிரம்மிப்பின் உச்சமாகவும் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பாகவும் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நாளை மறுநாள் ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. புகழ்மிக்க எழுத்தாளர் கல்கி அவர்களின் வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை மையப்படுத்தி இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் உருவாக்கி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வழக்கமாக மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் பணியாற்றக்கூடிய பாடலாசிரியர்களுக்கு மாற்றாக எழுத்தாளர் இளங்கோ கிருஷ்ணன் பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்களை எழுதினார். அவருடைய எழுத்தில் இருந்த புதுமையும் பழமையின் சுவையும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை ஒவ்வொரு பாடல்களுக்கும் பெற்று கொடுத்தது.
இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன், பொன்னியின் செல்வன் அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசினார். அந்த வகையில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். குறிப்பாக இயக்குனர் மணிரத்னம் அவர்களின் படங்களில் பணியாற்றும் போது கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு நள்ளிரவில் மூன்று மணிக்கு கூட போன் செய்து பாடல் வரிகளை கேட்பார் என சொல்லியிருந்தார். அந்த மாதிரி உங்களுக்கு எப்போதாவது நள்ளிரவில் போன் செய்து பாடல் வரிகள் வேண்டும் என கேட்டு இருக்கிறார்களா? எனக் கேட்டபோது,
"கேட்டிருக்கிறார்கள் ஆனால் அவ்வளவு நேரம் தள்ளி கேட்கவில்லை. எனக்கு ஒரு பதினோரு மணிக்கெல்லாம் கூப்பிட்டு இருக்கிறார்கள். எனக்கு போன் வரும் நான் அவருடைய உதவியாளர் தானே அழைக்கிறார் என உடனடியாக எடுத்து பேசுவேன். அவர் உடனே "சார் அருகில் ரஹ்மான் சார் இருக்கிறார் அவரிடம் கொடுக்கிறேன் பேசுங்கள்" என கொடுத்து விடுவார். ரஹ்மான் சார் பேசும்போது, "HI இளங்கோ எப்படி இருக்கிறீங்க பக்கத்துல மணி சார் இருக்காரு ஒரு பாடல் கம்போசிங் செய்திருக்கிறோம் அதனால் தான் உடனே கூப்பிட்டேன் ஒரு உற்சாகத்தில்... பண்ணலாமா" என கேட்பார். "பண்ணலாம் சார்" என்பேன். அவர்கள் டியூன் சொல்வார்கள் நானும் டம்மியாக ஓரிரு சொற்கள் சொல்வேன். அது கொஞ்சம் சரியாக செட் ஆகாது. அப்போது சரி நாங்கள் உங்களை தொந்தரவு செய்யவில்லை. நாங்கள் கம்போஸ் செய்த ஒரு உற்சாகத்தில் கூப்பிட்டு விட்டோம். நல்லது… நீங்கள் காலையில் கொடுங்கள் என ரஹ்மான் சார் சொல்வார். பின்னர் காலையில் நான் முடித்துக் கொடுப்பேன்."
என பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் பல சுவாரசியங்கள் பகிர்ந்து கொண்ட இளங்கோ கிருஷ்ணன் அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…