தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் LCU ஹிண்ட் கொடுத்த உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பதிவு குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சுவாரசியமாக பதில் அளித்திருக்கிறார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு காத்திருந்த தளபதி விஜயின் லியோ திரைப்படம் நாளை அக்டோபர் 19ஆம் தேதி உலகமெங்கும் மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. தற்போதைய இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதை நாயகனாக நடித்திருக்கும் இந்த லியோ திரைப்படம் முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்தே மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் லியோ திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக வெளிநாடுகளில் தளபதி விஜயின் லியோ திரைப்படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் எக்கசக்கமான சாதனைகளை முறியடித்து வருகிறது.
கதை நாயகனாக தளபதி விஜய் மற்றும் கதையின் நாயகியாக திரிஷா இணைந்து நடித்திருக்கும் இந்த லியோ திரைப்படத்தில் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், அனுராக் காஷ்யப், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், பாபு ஆண்டனி, மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மரியான், அபிராமி வெங்கடாசலம், ஜாஃபர் சாதிக், மாயா கிருஷ்ணன், சாந்தி மாயாதேவி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் லியோ திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். ஒருவேளை படம் LCUவில் இருந்தால் சர்ப்ரைஸாக எந்த நட்சத்திரம் அல்லது நட்சத்திரங்கள் வருவார்கள் என்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இயக்குனர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி திரைக்கதை மற்றும் வசனங்களில் பணியாற்றியுள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள லியோ திரைப்படத்திற்கு பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
இதனிடையே லியோ திரைப்படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று அக்டோபர் 18ஆம் தேதி தனது X பக்கத்தில், “தளபதி விஜய் அண்ணாவின் லியோ 👍🏽👍🏽👍🏽… இயக்குனர் லோகேஷ் கனகராஜன் சிறந்த ஃபிலிம் மேக்கிங்… அனிருத்தின் இசை அன்பறிவு மாஸ்டர்கள் 👏👏👏… #LCU 😉! ஆல் தி பெஸ்ட் டீம்!” எனக் குறிப்பிட்டு பதிவிட்டு எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை கூட்டியதோடு LCU பற்றிய சஸ்பெண்ட் செய்யும் போட்டு உடைத்தார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரது பதிவை பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில் சற்று முன்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பேசுகையில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பதிவு குறித்து கேட்டபோது, "அதில் LCU பக்கத்தில் கண் சிமிட்டுவது மாதிரி ஒரு ஸ்மைலி போட்டு இருப்பாரே... அதனால் காத்திருங்கள் நாளை காலை தெரிந்து விடும் இருக்கிறதா இல்லையா என்று" என பதில் அளித்தார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இந்த பதிலால் தளபதி விஜய் அவர்களின் லியோ படம் LCUவில் இருக்குமா இருக்காதா என்ற சுவாரஸ்யம் இன்னும் அதிகமாகிறது.