ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த பொங்கல் வெளியீட்டு திரைப்படங்களான தளபதி விஜயின் வாரிசு மற்றும் அஜித் குமாரின் துணிவு ஆகிய படங்கள் நேற்று ஜனவரி 11 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகின. நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித்குமார் மற்றும் தளபதி விஜயின் திரைப்படங்கள் ஒரே தினத்தில் ரிலீஸானதால் ரசிகர்களின் கொண்டாட்டங்களும் மோதல்களும் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தன.
அந்த வகையில் சென்னையில், சிந்தாதிரிப்பேட்டையை சார்ந்த பரத் எனும் ரசிகர், உற்சாகம் மிகுதியில் 14 சக்கரங்கள் கொண்ட ஒரு கனராக வாகனத்தின் மீது ஏறி குதிக்கும் பொழுது விபத்தில் சிக்கி பலியானார். வெறும் 19 வயதுடைய ரசிகரின் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ரசிகர் பரத்தின் தாயார் வீட்டு வேலை செய்து கஷ்டப்பட்டு அவரை கல்லூரியில் படிக்க வைத்துள்ளார். இந்த நிலையில் சினிமா கொண்டாட்டத்திற்கு சென்று உயிரிழந்த ரசிகரின் மரணத்தால் அவரது குடும்பம் மீளா சோகத்தில் மூழ்கி உள்ளது.
இந்நிலையில் கோயம்புத்தூரில் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் ரசிகரின் மரணம் குறித்து கேட்டபோது,
“ரசிகர்களும் பொறுப்பை உணர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் இது வெறும் சினிமா தான்! உயிரை விடும் அளவிற்கு இதில் ஒன்றும் முக்கியத்துவம் தேவையில்லை. இது பொழுதுபோக்கான விஷயம், சந்தோஷமாக போய் படம் பார்த்துவிட்டு திரும்பி வீட்டுக்கு ஒழுக்கமாக போய்விட்டாலே போதும் என நினைக்கிறேன். அவ்வளவுதான், உயிரே போகும் அளவிற்கு கொண்டாட்டங்கள் தேவை இல்லை” என நினைக்கிறேன். இதுதான் என்னுடைய கருத்து.” என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.