தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களாக நடித்து முன்னணி நடிகையாக தனித்து நிற்பவர் நயன்தாரா. பல தடைகள் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்தாலும் அதையெல்லாம் மீறி தனக்கான அடையாளத்தை அயராமல் உழைத்து பெற்றவர். மேலும் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நயன்தாரா தற்போது நடித்து வருகிறார். மேலும் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் உடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா தனக்கென்ற ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி ரசிகர்கள் அனைவராலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று தற்போது அழைக்கப்படுகிறார். நயன்தாரா ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தாலும் கதாநாயகி மையப்படுத்திய கதைகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. அதன் பின் பெரிதளவு படப்பிடிப்பிலும் போது நிகழ்விலும் பெரிதாக கலந்து கொள்ளாத நயன்தாரா சமீபத்தில் சென்னை தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மாணவ ரசிகர்களின் ஆரவாரத்துடன் மேடை ஏறிய நயன்தாரா கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அதில் அவர், "கல்லூரி வாழ்க்கை மகிழ்ச்சிகரமானது. இந்த நேரத்தில் நாம் யாருடன் பழகுகிறோம் என்பது முக்கியமானது. நல்ல நண்பர்களை தேர்வு செய்து பழக வேண்டும். கெட்ட நண்பர்களுடன் சேர்ந்தால் உங்கள் வாழ்க்கையே கெட்டுவிடும். உங்கள் நண்பர்கள் வட்டாரத்தை வைத்து தான் உங்கள் எதிர்காலமும் அமையும். இந்த கல்லூரி நாட்களில் எடுக்கும் முடிவுகள் தான் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதை என்னிக்கும் மறந்துவிடக்கூடாது. கல்லூரி முடித்து வெளியே சென்று நாம எவ்வளவு உயர போனாலும், எவ்வளவு வெற்றியை அடைந்தாலும் பணிவாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். கல்லூரி நண்பர்களோடு ஜாலியாக இருக்கலாம், ஆனால் அதே நேரத்தில் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தினமும் 10 நிமிடங்களையாவது அவர்களுக்காக ஒதுக்கி அவர்களுடன் செலவழியுங்கள். எவ்வளவு காசு பணம் கொடுக்க முடியாத சந்தோஷத்தை இது போல நேரம் ஒதுக்குவது உங்களுக்கு கொடுக்கும்.இது உங்கள் பெற்றோருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்” என்று கூறினார்.
இதனை தொடர்ந்து நயன்தாரா பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே நயன்தாரா மேடை பேச்சுக்கள் எல்லாம் படங்கள் குறித்தும் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்தும் அல்லது தனிப்பட்ட வாழ்வியல் குறித்தும் இருக்கும். ஆனால் பொதுவான கருத்துகள், சமூதாய நிலைப்பாடு குறித்து பெரிதளவு அவர் பேசியதில்லை. இந்நிலையில் நயன்தாரா கல்லூரி மாணவர்களுக்கு பொதுவான அறிவுரை வழங்கியது கவனத்தை ஈர்த்துள்ளது.