உலகெங்கும் இருக்கும் இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசான கே ஜி எஃப் சாப்டர் 2 திரைப்படம் தற்போது 1100 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆஃபீசில் புதிய சாதனை படைத்துள்ளது. இன்னமும் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றி நடை போட்டு வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில், பிரம்மாண்ட படைப்பாக தயாராகியுள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தின் பக்கா மாஸ் கதாநாயகனாக ராக்கி கதாபாத்திரத்தில் நடிகர் யாஷ் நடிக்க, ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மிரட்டலான வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க, பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன், ஈஸ்வரி ராவ், அனன்ட் நாக், மாளவிகா அவினாஷ் ஆகியோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம், மிரட்டலான காட்சி அமைப்புகள், மாஸான வசனங்கள், விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் என கம்ப்ளீட் கமர்சியல் பேக்கேஜாக வெளிவந்த கே ஜி எஃப் சாப்டர் 2 திரைப்படத்தை மொழிகளைக் கடந்து இந்தியாவின் அனைத்து சினிமா ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கேஜிஎஃப் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் மோகன் ஜுனேஜா காலமானார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் சிறிய குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள நடிகர் மோகன் ஜுனேஜா சின்னத்திரையில் சில மெகா தொடர்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

கேஜிஎஃப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தாலும் முதல் பாகத்தில் இவர் பேசிய மான்ஸ்டர் வசனம் மிகப் பிரபலமானது. கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நடிகர் மோகன் ஜுனேஜா சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட நடிகர் மோகன் ஜுனேஜா மறைவுக்கு தென்னிந்திய திரை உலகை சார்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.