மிகச் சிறந்த இயக்குனராக இந்திய திரையுலக ரசிகர்கள் இதயத்தை விட்டு நீங்காத படைப்புகளை வழங்கிய, இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தொடர்ந்து நடிகராகவும் தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.  அந்த வகையில் கடைசியாக தனுஷுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த பாரதிராஜாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

முன்னதாக உடல்நலக் குறைவு காரணமாக சில வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா சில தினங்களுக்கு முன்பு பூரண குணமடைந்து வீடு திரும்பினார். நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா அவர்களை தொடர்ந்து 40 நாட்கள் கட்டாயமாக ஓய்வில் இருக்க வேண்டிய மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா அவர்களை உலகநாயகன் கமல்ஹாசன் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்திருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு இயக்குனர் பாரதிராஜா அவர்கள் தொலைபேசி வாயிலாக தன்னை தொடர்பு கொண்டு பேசியது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “நலம் பெற்று வீடு திரும்பிய  திரு. பாரதிராஜா, அம்மகிழ்ச்சியான செய்தியை இன்று என்னுடன் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டார். மருத்துவமனையில் நலம் விசாரிக்கச் சென்றபோது, ஆஸ்பத்திரியில் உங்களைப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை.. சீக்கிரம் வீடு திரும்புங்கள், நான் புறப்படுகிறேன் என்று சொன்னேன். Ok see you later for sure, Bye என்று ஆங்கிலத்தில் சொல்லி வழியனுப்பினார். சொன்ன வாக்கைக் காப்பாற்றிய என் தேனிக்கார நண்பருக்கு இந்தப் பரமக்குடியானின் வாழ்த்துக்கள்.” என தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் அந்த பதிவு இதோ…

 

நலம் பெற்று வீடு திரும்பிய திரு. பாரதிராஜா, அம்மகிழ்ச்சியான செய்தியை இன்று என்னுடன் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டார். (1/3)

— Kamal Haasan (@ikamalhaasan) September 26, 2022