என் அம்மா இறந்தப்போ... அஜித் உடனான நெகிழ்வான தருணம் பற்றி மனம்திறந்த கல்யாண் மாஸ்டர்! வீடியோ இதோ
By Anand S | Galatta | December 16, 2022 19:31 PM IST
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவரான அஜித்குமார் மேற்கொண்ட பார்வை & வலிமை திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு (2023) பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ம் தேதி ரிலீஸாகிறது.போனி கபூர் தயாரிப்பில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்ய, துணிவு திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
அஜித் குமாருடன் இணைந்து மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, சிபி புவனச்சந்திரன், பிக் பாஸ் அமீர், பாவணி, மமதி சாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த துணிவு திரைப்படத்தின் முதல் பாடலாக ராக் ஸ்டார் அனிருத் பாடிய சில்லா சில்லா பாடல் சில தினங்களுக்கு முன் வெளியாகி வைரல் ஹிட்டாகியுள்ளது.
முன்னணி நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் துணிவு திரைப்படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் இந்நிலையில் நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில் துணிவு திரைப்படம் குறித்தும் அஜித் குமார் அவர்களுடன் பணியாற்றுயது குறித்தும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அந்த வகையில் பேசும் போது அஜித் குமார் அவர்கள் தன்னை இனி தல என அழைக்க வேண்டாம் என ஏன் சொன்னார்..? எனக் கேட்டபோது, “ஏனென்றால் அவர் மிகவும் எளிமையானவர். “எதற்காக தல என அழைக்க வேண்டும். அதெல்லாம் வேண்டாம் அஜித் தானே எனது பெயர் அதுவே போதும்” என கூறினார். அதுபோலவே அவரது எளிமைக்கு உதாரணமாக நான் பலமுறை பல பேட்டிகளில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறேன். அப்படி ஒன்று, 2005 காலகட்டத்தில் அவர் நல்ல புகழில் இருந்த சமயத்தில் என் அம்மா உடல்நிலை மிகவும் மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது நேரடியாக மருத்துவமனைக்கு வந்து என் குடும்பத்தாரோடு என் அருகில் அமர்ந்திருந்தார். நான் கூட சொன்னேன் ஏன் இப்படி இங்கே இருக்கிறீர்கள் யாராவது பார்த்தால் கையெழுத்து (AUTOGRAPH)போடுங்கள் அது இது என ஏதாவது கேட்பார்கள். தொந்தரவு செய்வார்கள் என சொன்னேன். அப்போது அவர் “எனது அம்மாவிற்கு உடல்நிலை இப்படி இருந்தால் நான் போவேனா இங்கே தானே இருப்பேன். உங்கள் அம்மா எனக்கும் அம்மா போல தானே அவர் கையால் சாப்பிட்டு இருக்கிறேன். நான் இருக்கிறேன்” என சொன்னார். அதேபோல் என் அம்மா இறந்த பிறகும் அவர் “எனது காரில் தான் அழைத்து செல்வேன்” என அவரது காரிலேயே என் அம்மாவை அழைத்து வந்து இதே ஃபிளாட்டில் எங்களோடு உடன் நின்றார்” என கல்யாண் மாஸ்டர் பகிர்ந்து கொண்டார் மேலும் பல சுவாரசிய தகவல்களை கல்யாணம் மாஸ்டர் பகிர்ந்து கொண்ட அந்த முழு பேட்டி இதோ…