ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்ததால் கைது செய்யப்பட்டரா?!
By Arul Valan Arasu | Galatta | August 22, 2019 11:26 AM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, ப.சிதம்பரம், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தான் குற்றம் சாட்டப்படவில்லை என்றும், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார்.
இதனிடையே ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்திப்பதை அறிந்த சிபிஐ அதிகாரிகள், அங்கு விரைந்து சென்றனர். ஆனால், அதிகாரிகள் வருவதற்குள் ப.சிதம்பரம், செய்திளார்கள் சந்திப்பை முடித்துவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றார்.
இதனையடுத்து, ப.சிதம்பரத்தை பின்னாடியே தொடர்ந்து சென்ற சிபிஐ அதிகாரிகள், ப.சிதம்பரம் வீட்டிற்குள் நுழைந்த பிறகு, அவரது வீட்டின் வாசலில் வந்து நின்றார்கள். இதனால், அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சற்று நேரத்திற்குள் அங்கு ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டதால், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் அங்குக் குவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தின் வீட்டின் கதவு தட்டிக்கொண்டே இருந்தார்கள். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால், சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தின் வீட்டின் சுவரை ஏறிக் குதித்து உள்ளே சென்று வீட்டின் கேட்டை திறந்து விட்டனர். இதனையடுத்து, மற்ற அதிகாரிகளும் போலீசாரும் ப.சிதம்பரத்தின் வீட்டிற்குள் சென்று அவரை கைது செய்து, சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் முதற்கட்டமாகச் செய்யப்பட்டன. இதனிடையே, ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தால் கைது செய்யப்பட்டரா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.