தனக்கே உரித்தான பாணியில் பக்கா ஸ்டைலான படங்களை கொடுத்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த இயக்குனர் கௌதம் வாசுதே மேனன் தனது பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்து மெகா ஹிட் ஆனது. தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள ஆக்ஷன் படமான துருவ நட்சத்திரம் திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளதாக தெரிகிறது. இதனிடையே நடிகராகவும் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வரும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன் வெளிவந்த விடுதலை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். அடுத்ததாக தற்போது தளபதி விஜயின் 67வது படமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இயக்குனர் தங்கர் பச்சான் தனது கம்பேக் திரைப்படமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியிருக்கும் கருமேகங்கள் கலைகின்றன படத்தில் கௌதம் வாசுதேவனின் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கதையின் நாயகனாக இயக்குனர் இமயம் பாரதிராஜா நடிக்க, யோகி பாபு, அதிதிபாலன், மந்தமோகன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள கருமேகங்கள் கலைகின்றன படத்திற்கு NK.ஏகாம்பரம் ஒளிப்பதிவில், லெனின் படத்தொகுப்பு செய்ய, ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களிடம், “ஒரு இயக்குனராக கேமராவுக்கு பின்னால் நின்று இயக்குவது ஈஸியா? அல்லது ஒரு நடிகராக கேமராவுக்கு முன்னால் நடிப்பது ஈஸியா?” எனக் கேட்டபோது,
“ஒரு இயக்குனராக கேமராவிற்கு பின்னால் நின்று இயக்குவது தான் ரொம்ப ஈஸி... ஒரு 10-15 படங்களில் நடித்ததனால் எனக்கு நடிகர்களின் மீது ஒரு பெரிய மரியாதை வந்திருக்கிறது.” என்றார். மேலும் அவரிடம், "நடிக்க வந்தால் இவ்வளவு சலுகைகள் கிடைக்குமா? என நீங்கள் நினைத்த ஒரு விஷயம்... நடிப்பதில் இவ்வளவு கஷ்டம் இருக்கிறதா? என நீங்கள் நினைக்கும் ஒரு விஷயம்..." என கேட்டபோது, “இல்லை நடிக்க வருவது என்பது மிகவும் கஷ்டம் தான். ஒரு கேமராவின் முன்னால் நிற்பது.. இப்போதும் அந்த ஒரு கான்சியஸ் இருக்கிறது. இதில் ஒரு கேமரா சுற்றி ஒரு நூறு பேர்… நம்மை மறந்து நாம் நடிக்க வேண்டும் என்பது அவ்வளவு ஈஸியான விஷயம் கிடையாது. ஆனால் இந்த படத்தை பொருத்தவரைக்கும் நான் பண்ணாத சில விஷயங்களை இயக்குனர் தங்கர் பச்சான் பண்ண வைத்திருக்கிறார். என்னை அழ வைத்து இருக்கிறார் வாழ்க்கையில் அல்ல… படத்தில்..! நிறைய சுவாரசியமான காட்சிகள் இருந்தது, இந்த படத்தில், வசனங்கள் எல்லாம் முன்னாடியே எனக்கு கொடுத்து கொஞ்சம் பயிற்சி கொடுத்து தான் நடிக்க வைத்திருக்கிறார். நான் மிகவும் ரசித்தேன்” என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். கருமேகங்கள் கலைகின்றன பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசிய வீடியோ இதோ…