இந்திய சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக படத்திற்கு படம் வியப்பில் ஆழ்த்திய தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாளே பிலிம்ஸ். கடந்த 2018 ம் ஆண்டு யாஷ் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி இந்திய ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்ற திரைப்படம் கே.ஜி.எஃப் முதல் பாகம். இந்தியாவில் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி வசூலை குவித்த கே.ஜி.எஃப் திரைப்படம் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்று இமாலய வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கடந்த ஆண்டு கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டது ஹோம்பாளே பிலிம்ஸ். முதல் பாகத்தை விட மூன்று மடங்கு வசூலையும் வரவேற்பையும் பெற்று இந்திய சினிமாவில் கன்னட திரைத்துறைக்கு தனி கவுரவத்தை பெற்று தந்தது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கடந்த ஆண்டு ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’ .
கன்னடத்தில் கிடைத்த வரவேற்பையடுத்து இந்தியாவில் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு காந்தாரா திரைப்படம் வெளியிடப்பட்டது. குறைந்த பொருட்செலவில் உருவான இப்படத்திற்கு வசூல் அடிப்படையிலும் விமர்சன அடிப்படையிலும் ரசிகர்கள் பெருவாரியான ஆதரவினை அளித்து இப்படத்தை மிகப்பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாக்கினர். தொடர் மிகப்பெரிய இமாலய வெற்றியை கொடுத்து வரும் ஹோம்பாளே பிலிம்ஸ் இந்தியாவில் கவனிக்கத்தக்க முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. தற்போது கன்னடம் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் படங்களை தயாரித்து வருகின்றனர். மேலும் வெற்றி பெற்ற கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாம் பாகம் மற்றும் காந்தாரா படத்தின் முதல் பாகம் என்று திட்டங்களை வரிசை கட்டி வைத்துள்ளது., தற்போது தமிழில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ரகு தாத்தா படத்தையும் கே.ஜி.எஃப் பட இயக்குனர் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தையும் மற்றும் பல முக்கிய படங்களை தயாரித்து வருகின்றன ஹோம்பாளே பிலிம்ஸ்.
இதனிடையே முதல் முறையாக மலையாளத்தில் ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் ‘தூமம்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. லூசியா , யூடர்ன் ஆகிய படங்களின் இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் ஃபகத் பாசில் ஹீரோவாக நடிக்கும் இப்படம் அறிவிப்பிளிருந்தே தனி எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. இப்படத்தில் ஃபகத் பாசில் உடன் இணைந்து அபர்ணா பாலமுரளி, ரோஷன் மாத்திவ், வினீத் ராத கிருஷ்ணன், அனு மோகன் உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ப்ரீதா ஜெயராம் ஒளிப்பதிவு செய்ய சுரேஷ் ஆறுமுகம் படத்தொகுப்பு செய்கின்றார். இசையமைப்பாளர் பூர்ணசந்திரா தேஜஸ்ரீ படத்திற்கு இசையமைகின்றார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகியிருக்கும் தூமம் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளது படக்குழு. அதில், திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் போதை பொருள் எதிரான காட்சிகளை முதலில் அறிமுகம் செய்து அதை மக்கள் பார்ப்பது போல் கொடுக்க போகிறோம் என்று ட்ரைலர் துவங்க பின் துப்பாக்கி, போதை, ஓட்டம், கொலை, என்று கணிக்க முடியாத காட்சிகளுடன் டிரைலர் வெளியாகியுள்ளது. டிரைலரில் தனித்து தெரிகிறார் படத்தின் நாயகன் ஃபகத் பாசில். விறுவிறுப்பாக வெளியாகியுள்ள தூமம் படத்தின் டிரைலர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. வரும் ஜூன் 23 ம் தேதி மலையாளம், கன்னடம், தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகமெங்கும் தூமம் திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது