சம கால தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தி வரும் இயக்குனராகவும் நேர்த்தியான கதை கருவை கொண்டு திரைக்கதை அமைத்து மக்களை கவரும் கலைஞராகவும் இருந்து வருகிறார் இயக்குனர் வெற்றி மாறன். தான் எடுத்த எந்தவொரு படமும் ரசிகர்களை ஏமாற்றிவிட கூடாது என்று எண்ணி ஒவ்வொரு பாடங்களையும் வெவ்வேறு கதைகளத்துடன் மக்களை அணுகி வருகிறார். இயக்குனர் பாலுமகேந்திராவின் உதவி இயக்குனராக பணியாற்றிய வெற்றி மாறன் ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் அறிமுகமாகி மக்களை வெகுவாக கவர்ந்தார். அதன் பின் நடிகர் தனுஷுடன் இணைந்து ‘ஆடுகளம்’ , ‘வடசென்னை’, ‘அசுரன்’ என தொடர் கூட்டணியில் வெற்றி படங்களை குவித்தார், ஒவ்வொரு படங்களும் விருதுகளை குவித்தது குறிப்பாக ஆடுகளம் ஆறு தேசிய விருதுகளையும், அசுரன் இரண்டு தேசிய விருதுகளையும் பெற்று தந்தது.

மேலும் இதற்கிடையே விசாரனை படத்தை இயக்கி சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் பெற்றார். பேருக்கேற்றார் போல் வெற்றியை மட்டுமே கொடுத்து வரும் வெற்றி மாறன் தற்போது சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் மட்டுமல்லாமல் உதயம், 'காக்கா முட்டை', 'விசாரணை','கொடி', 'அனல்மேலே பனித்துளி' உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களில் மட்டுமல்லாமல் கிடைக்கும் மேடைகளில் சமூக பிரச்சனைகளையும் தனி மனித ஒழுக்கங்களையும் பேசி வருபவருமாய் இருந்து வருகிறார். மேலும் மாற்றங்களையும் மாறுதல்களையும் தொடர்ந்து தன் படங்கள் மூலமாகவும் வெற்றிமாறன் அவர் பேச்சு செயல் மூலமாகவும் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் சென்னை லயோலா கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெற்றிமாறன்  மாணவர்களிடையே உரையாற்றினார் அதில்,

“ஆரோக்கியம் உடல் திடகாத்திரம் என்பது  வெறும் ஜிம்முக்கு சென்று தசைகளை வலுவாக்குவது மட்டுமல்ல.. சிலர் ஜிம்முக்கு செல்வார்கள் அதன்பின்னரே புகைபிடிக்கவும் செய்வார். அதில் ஒரு பயனுமில்லை. இந்த பழக்கம் ஒரு கட்டத்தில் ஈஸியாக இருக்கலாம் ஆனால், அதன் பிறகு அது அப்படியிருக்காது. நான் கல்லூரியில் படிக்கும்போது, ஒருநாளுக்கு 60 - 70 சிகரெட்டுகளை புகைப்பேன். கல்லூரிக்கு பின் படம் எடுக்கும்போது ஒரு நாளுக்கு 170 - 180 சிகரெட்டுகளை புகைப்பேன். அதன்பின் தான் உணர்ந்தேன் நான் நானாக இருக்க முடியவில்லை. என்னால் எந்தவொரு செயலிலும் 100 சதவீதத்தை கொடுக்கமுடியவில்லை.

'இயக்குநராக வேண்டுமென்றால் முதல் தகுதி என்பது குறித்து இயக்குனர் சத்யஜித் ரேவிடம் கேட்டார்களாம். அதற்கு அவர், ‘ஒரு இடத்தில் உங்களால் 8 மணி நேரம் தொடர்ந்து நிற்க முடியும் என்றால் மற்ற திறமைகள் தானாக வரும்' என்றாராம். என்று என்னுடைய குரு பாலு மகேந்திரா சொல்வார். அதற்கு அர்த்தம் நீங்கள் உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது தான், என்னால் அப்படி இருக்க முடியவில்லை அதை மாற்ற நினைந்து உடல் நிலையை பரிசோதித்து பார்த்தேன். அதில் மாற்றம் இருந்தது. என் மருத்துவர் என்னை புகைப்பழக்கத்தை கைவிட வலியுறுத்தினார். நான் அதை மறுத்துவிட்டேன். பின்னர் என்னை நானே உணவு பழக்கம், வேலை பழக்கம் என்று பல மாறுதல்களை எனக்குள் செய்த பின்னர் முழுமையாக அதிலிருந்து மீண்டுவிட்டேன். நாம் என்ன உடலுக்கு கொடுக்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும் நல்ல உறக்கத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள்  உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.” என்று பேசினார்.  மேலும் நிகழ்வையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் வெற்றி மாறன் “என்னுடைய படங்களில் முடிந்த வரை மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளை தவிர்ப்பேன்” என்று தெரிவித்தார். இந்த நிகழ்வில் வெற்றி மாறன் பேசியதையடுத்து அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.