இலவச விளம்பரம் ஆரம்பிச்சுட்டீங்க போல ! சூர்யா பட பாடல் விவகாரம் குறித்து இயக்குனர் பதிவு
By Sakthi Priyan | Galatta | September 16, 2020 09:43 AM IST
2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார்.
ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.
சூரரைப் போற்று படம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நேரடியாக OTT இணையத் தளத்தில் வெளியாக உள்ளது. சுதா கொங்கரா இயக்கி உள்ள இந்த படம் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் வெளியாகாமல் இருக்கிறது. அதனால் தான் அதை நேரடியாக OTT தளம் ஒன்றி வெளியிட சூர்யா முடிவெடுத்தார். இது பற்றி அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் வரும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் இருக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தில் வரும் மண்ணுருண்ட மேல என்ற பாடலில் சாதி தொடர்பான வரிகள் இருக்கிறது என கூறி புகார் அளிக்கப்பட்டது. இது அமைதியை குலைக்கும் வகையில் இருக்கிறது என கூறி வழக்கு தொடரப்பட்டு உள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கும் இந்த பாடலின் வரிகளை ஏகாதசி எழுதி இருந்தார்.
மண்ணுருண்ட மேல இங்க, மனுச பைய ஆட்டம் பாரு
கண்ணு ரெண்ட மூடி புட்டா, வீதியில போகும் தேரு
அண்டாவுல கொண்டு வந்து, சாராயத்த ஊத்து
அய்யாவோட ஊர்வலத்தில் ஆடுங்கடா கூத்து..என இந்த பாடலின் வரிகள் இருக்கும்.
இந்த பாடல் மீதான புகாரை விசாரித்த நீதிமன்றம் அந்த படம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் சூர்யாவுக்கு புது சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே சூர்யா மற்றும் சூரரைப் போற்று படம் பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் சூழலில் இது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற பாடல் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால், 2022 வரை படத்துக்கு தடை விதிக்கக் கோரி, தர்மபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், புகாரை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
சில தினங்களுக்கு முன்பு சூர்யா நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது என குறிப்பிட்டு இருந்தார். நீதிமன்ற செயல்பாடு பற்றி இப்படி பேசியதற்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் என்பவர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து இயக்குனர் ஜான் மகேந்திரன் பதிவு செய்துள்ளார். அவரது பதிவில், இலவச விளம்பரம் ஆரம்பிச்சுட்டீங்க போல குட் பாய்ஸ் என பதிவு செய்துள்ளார். இதன் கீழ் சூர்யா ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.