'அஜித் சார் நம்பர் 1 நம்பர் 2 விளையாட்டை எல்லாம் விரும்புவதில்லை' - 'துணிவு' நடிகை மஞ்சு வாரியர் பதில்!
By Malik | Galatta | January 05, 2023 18:20 PM IST
அஜித் நடித்துள்ள துணிவு படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ல் வெளியாகவிருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு அஜித் தந்த அட்வைஸ் குறித்து நடிகை மஞ்சு வாரியர் கலாட்டா தமிழ் சேனலுக்குத் தந்த பிரத்தியேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு, விஜய் வேலுகுட்டி. சண்டைக்காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைத்துள்ளார். கலை இயக்குநராக மிலன் பணியாற்றியுள்ளார். மேலும் கல்யாண் இப்படத்திற்கு நடனம் அமைத்துள்ளார். துணிவு படத்திலிருந்து இதுவரை 'சில்லா சில்லா', 'காசேதான் கடவுளடா' மற்றும் 'கேங்க்ஸ்டா' உள்ளிட்ட பாடல்கள் வெளியாகியுள்ளன.
வங்கிக்கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அஜித்தை ரசிகர்கள் விரும்பும் பரிமாணத்தில் ஸ்டைலாகக் காட்சிப்படுத்தியிருந்த இதன் டிரெய்லர், யூடியூபில் தற்சமயம் வரை 53 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
மாஸான லுக்குடனும் தெறிக்கவிடும் மேனரிசங்களுடனும் அஜித் பேசும் வசனங்களும், டிரெய்லரில் இடம்பெறும் அவரது நடனமும் அவரது ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. மேலும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம்வரும் மஞ்சுவாரியரின் ஆக்ஷன் சீக்வன்சுகளும் டிரெய்லரில் மிரட்டும் தொனியில் இருந்தன.
இந்நிலையில் கலாட்டா தமிழ் சேனலுக்கு நடிகை மஞ்சுவாரியர் அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில், நடிகர் அஜித் பற்றிய முக்கிய கேள்விகளுக்கு அவர் விடையளித்துள்ளார். 'ரசிகர்கள் குறித்து அஜித் அதிகம் பேசும், பகிர்ந்துகொள்ளும் விஷயங்கள் என்னென்ன?' என்ற கேள்விக்கு விடையளித்துள்ள அவர், "நம்மால் யாருக்கும் எந்த ஒரு கஷ்டமும் வந்துவிடக்கூடாது என்று அஜித் சார் நினைப்பார். அஜித் சாரின் பெயரைப் பயன்படுத்தி இரண்டு பேர் சண்டை போட்டுக்கொள்வது கூட அவருக்கு பிடிக்காது. ஏனெனில் அவர் எப்பொழுதும் அமைதியை அதிகம் விரும்பக்கூடியவர். எல்லாரும் சமாதான உணர்வுடன் இருக்கவேண்டும் என்று அஜித் சார் விரும்புவார்" என்று தெரிவித்தார்.
மேலும் 'நம்பர் 1 நம்பர் 2 என்ற விளையாட்டையெல்லாம் அஜித் சார் விரும்புவாரா?' என்ற கேள்விக்கு, "அதையெல்லாம் அஜித் சார் என்றும் விரும்பியதில்லை. மேலும் இது போன்ற விஷயங்கள் எதுவும் அவரை பாதிப்பது கூட இல்லை. அவர் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் அமைதியான முறையிலும் வாழவே விரும்புகிறார். மேலும் அவரது ரசிகர்களும் அதையே பின்பற்ற வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார்" என்று பதிலளித்தார். மேலும் அஜித் பற்றிய பல கேள்விகளுக்கும், 'துணிவு' படம் குறித்த முக்கிய கேள்விகளுக்கும் அவர் விரிவாக விடையளித்துள்ளார். அவர் கலந்துகொண்ட நேர்காணலின் வீடியோ உங்கள் பார்வைக்கு