துணிவு படத்தின் Bank Set – சுவாரஸ்யமான ரகசியங்களை போட்டுடைத்த எச்.வினோத்.. முழு வீடியோ இதோ..
By Vijay Desing | Galatta | January 11, 2023 16:25 PM IST
பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் கோலாகல கொண்டாட்டங்களுடன் அஜித் நடிப்பில் ‘துணிவு’ படம் இன்று வெளியானது. தமிழகமெங்கும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் வெளியிடப்பட்ட இப்படத்தின் முன்பதிவுகள் பொங்கலையொட்டி மும்முரமாக நடைபெற்று கொண்டிருகிறது. ஆட்டம் பாட்டத்துடன் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் வரவேற்பில் இன்று காலை வெளியான துணிவு படம் பெரும்பாலான பகுதிகளில் கொண்டாட்டங்களுடன் திரையிடப்பட்டு வருகிறது. எச் வினோத் இயக்கத்தில் வங்கி கொள்ளையை மையப்படுத்தி உருவான இப்படத்தில் நடிகர் அஜித் உடன் சமுத்திரகனி, மஞ்சுவாரியர், ராஜதந்திரம் வீரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் பாடல்கள் முன்னதாக அமோக வெற்றி பெற்றது.
துணிவு படத்தின் கொண்டாட்டங்களுகிடையே துணிவு படத்தின் இயக்குனர் எச்.வினோத் நமது கலாட்டா மீடியாவிற்கு அளித்த பேட்டியில் துணிவு படம் குறித்தும், அஜித்துடன் பணியாற்றியது குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இதில் துணிவு பட தளம் உருவாக்கம் குறித்த கேள்விக்கு,
“சென்னை நகரில் உள்ள முக்கிய கட்டடங்கள், பாரம்பரிய கட்டடங்களின் மாதிரி எடுத்து ஒரு தெருவை கற்பனையாக உருவாக்கிருப்போம். கலை இயக்குனர் மிலன் சார் முதலில் அந்த தெருவிற்கான வரைபடத்தை எங்களுக்கு காட்டினார். அதன்பின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா சாருடன் கலந்தோசித்து அந்த செட்டுக்கான மாதிரி செட்டை சிறிய வடிவில் உருவாக்கினோம். அதன் பின் ஒரு பட்ஜெட்டை திட்டமிட்டோம். மிலன் சார் குடும்பத்தோடு அந்த இடத்திலே தங்கி படத்திற்கான பிரத்யேக செட்டை உருவாக்கினார் இதற்கே ஒரு ஆறு மாதம் தேவைப்பட்டது. பாரம்பரிய வங்கி கட்டடங்களை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்ட அந்த செட் ஒரு 10 லிருந்து 15 கோடி செலவு ஏற்பட்டது (அது சரியாக தெரியவில்லை). இது சமீபத்தில் போடப்பட்ட செட்டுக்களில் பெரிய செட். கொஞ்சம் சுவாரஸ்யமான செட்டும் கூட.. ஏனென்றால் மிலன் சார் அதில் நிறைய நுணுக்கமான விஷயங்களை கையாண்டிருக்கிறார். படத்தில் ஒரு காபி ஷாப் செட் வரும் அதன் வெளித்தோற்றம் முழுக்க முழுக்க தெர்மகோல் மூலம் செய்திருப்பார். எனக்கு அது 15 நாள் கழித்து தான் அது தெர்மோகோல் என்று தெரிய வந்தது. அவ்வளவு நுணுக்கமாக இருந்தது. மிலன் சார் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் குறித்து அதிகளவு புரிதல் கொண்டவர், அவர் ரொம்பவும் சுவாரஸ்யமான ஆளும் கூட..” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படம் குறித்து அவர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..