‘துணிவு’ படத்திலிருந்து இத்தனை காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதா? சான்றிதழில் தணிக்கை குழு குறிப்பிட்டுள்ளது என்
By Malik | Galatta | January 03, 2023 13:43 PM IST
அஜித்தின் 'துணிவு' படத்திற்கு சென்சார் போர்டு எனப்படும் தணிக்கை குழு U/A சான்றிதழ் அளித்துள்ள நிலையில், படத்தின் பல காட்சிகளை தணிக்கை குழு நீக்கியும், மாற்றியும் உள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படம் 'துணிவு'. மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, ஜான் கொகேன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வங்கிக்கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நீரவ்ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு, விஜய் வேலுகுட்டி. இதுவரை இப்படத்திலிருந்து 'சில்லா சில்லா', 'காசேதான் கடவுளடா', 'கேங்க்ஸ்டா' உள்ளிட்ட பாடல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அஜித்தை ரசிகர்கள் விரும்பும் பரிமாணத்தில் ஸ்டைலாகக் காட்சிப்படுத்தியிருந்த இதன் டிரெய்லர், யூடியூபில் 38 மில்லியன் பார்வையாளர்களை இதுவரை கடந்துள்ளது.
வில்லத்தனம், கிண்டல், நையாண்டி, நடனம் என்று இதில் இடம்பெற்றிருக்கும் அஜித்தின் 'அடடே...ஆசம்' காட்சிகள் ரசிகர்களின் ஆவலை இன்னும் அதிகமாகத் தூண்டியுள்ளது. அதே நேரம் எதிராளிகளை துப்பாக்கித் தோட்டாக்களால் அவர் சுட்டு துவம்சம் செய்து டெரர் காட்டும் காட்சிகளும் அனல் தெறிக்கும்படியாக உள்ளன.
இந்நிலையில், இப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான போனி கபூரின் ‘Bayview ProjectsLLP’ நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் படத்தின் நீளம் மற்றும் படத்தில் நீக்கப்பட்டுள்ள, திருத்தப்பட்டுள்ள தகவல்கள் அடங்கிய தணிக்கை குழுவின் சான்றிதழும் வெளியாகியுள்ளது. அதன்படி துணிவு திரைப்படத்தின் நீளம் 145 நிமிடங்கள் மற்றும் 48 விநாடிகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போன்றே, 'துணிவு' படத்தில் 13 இடங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. படத்தில் இரண்டு இடங்களில் 14 மற்றும் 4 விநாடிகளாக மொத்தம் 18 விநாடிகளுக்கு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் இரண்டு இடங்களில் 6 மற்றும் 4 விநாடிகளாக மொத்தம் 10 விநாடிகள் நீக்கப்பட்டுள்ளன; 6 இடங்களில் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாக அந்த இடங்கள் ஒலிநீக்கம்(Mute) செய்யப்பட்டுள்ளன.
இதில் எந்தெந்த இடங்களில் எந்தெந்த வார்த்தைகளுக்காக ஒலிநீக்கம் செய்யப்பட்டுள்ளது மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது தணிக்கை சான்றிதழில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படியே படத்தின் இறுதி நீளமாக 145 நிமிடங்கள் 48 விநாடிகள் இறுதிசெய்யப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியான டிரெய்லரில் ஒரு இடத்தில் அஜித்குமார் பேசும் காட்சியில் ஆபாச வார்த்தை ஒன்று எந்த ஒலிநீக்கமும் இல்லாமல் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.