ஐரா திரைப்பட விமர்சனம்
By Sakthi Priyan | Galatta | March 27, 2019 23:03 PM IST
KJR ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் பிரியங்கா ரவீந்திரன் திரைக்கதையில் 28 மார்ச் 2019 அன்று வெளியாகியிருக்கும் படம் ஐரா. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, யோகிபாபு, கலையரசன், மாதேவன், காப்ரெல்லா, குலப்புள்ளி லீலா, அஸ்வந்த் இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
முதல் பாதி வழக்கம் போல் உள்ள ஹாரர் த்ரில்லர் படங்களுக்கு என்ன என்ன தேவையோ அதை சரியாக வெளிக்காட்டினார் இயக்குனர். இரண்டாம் பாதியில் கதையம்சம் என்னவென்பதை ரசிகர்களுக்கு எடுத்துரைக்கின்றனர்.
லேடி சூப்பர் ஸ்டார் என்ற டைட்டில் கார்டு வரும்போது கேட்கும் கைத்தட்டல் சத்தம் நயன்தாராவின் திரை வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. கதைக்கு வருவோம், முதல் பாதியில் பத்திரிக்கையாளர் யமுனாவாக வரும் நயன்தாராவின் நடிப்பு அவரது பாணியில் உள்ளது. யோகிபாபுவுடன் சேர்ந்து சிரிக்க வைக்கும் காட்சிகள் அற்புதம். நயன்தாராவின் பாட்டியாக வரும் குலப்புள்ளி லீலாவின் நடிப்பு நிச்சயம் போற்றக்கூடியவை.
தொழில்நுட்ப ரீதியாக படத்தில் எந்த குறையும் இல்லை. இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள் சற்று மெதுவாக செல்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி பேசப்படும் அளவிற்கு இருக்குமா என்பது சந்தேகம் தான். இயக்குனர் சற்று சுருக்கமாக end card வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
ஒளிப்பதிவாளர் சுதர்ஷனின் டாப் அங்கிள் ஷாட்ஸ் பாராட்டப்பட வேண்டும். குறிப்பாக காற்றாலையை காண்பிக்கும் ஷாட்ஸ் ஹாட்ஸ் ஆஃப். கதைக்கு ஏற்ற பின்னணி இசை அமைந்தது ஆரோக்கியமே. குறிப்பாக மேகதூதம் பாடல் மனதை வருடி விடுகிறது என்றே கூறலாம்.
நடிகர் கலையரசன் எந்த கேரக்டர் தந்தாலும் அதை சரியாக ஏற்று நடிக்கும் தாகம் தீரா கலைஞன். குழந்தை நட்சத்திரம் அஸ்வந்திற்கென தனி ரசிகர்கள். இணையதள புகழ் மாதேவன், சிறந்த அறிமுக நடிகர் என்ற நற்பெயரை சம்பாதித்திருக்கிறார். அமுதன் என்ற பாத்திரத்தில் தனக்கு குடுத்து வேலையை அழகாக செய்திருக்கிறார்.
youtube-ல் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் கிராமத்திற்கு வரும் யமுனா சந்திக்கும் பிரச்சனைகள் ஒருபுறம், தீங்கு விளைவித்தவர்களை பழிவாங்கும் பவானியின் ஆத்மா மறுபுறம் என்ற நகர்கிறது கதை. கருப்பு வெள்ளையில் flashback காட்சியை காண்பித்தது கூடுதல் சிறப்பு. சிறு வயது நயன்தாராவாக நடித்த காப்ரெல்லாவின் நடிப்பு தரமாக அமைந்தது. ஹாலிவுட் திகில் படம் பார்த்து சலித்தவர்களுக்கு இந்த கதை தீனி போடாது என்றே கூறலாம்.
சமூகத்தில் நடக்கும் மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த ஐரா. காதலின் கச்சிதத்தை கருப்பு வெள்ளை காவியமாக எடுத்துரைக்கும் இந்த ஐரா.
கலாட்டா ரேட்டிங் - 2.25 / 5