புரட்சித் தளபதி விஷால் & நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அடுத்தடுத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் மற்றும் பகீரா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது அடுத்த படைப்பாக இயக்கியிருக்கும் இந்த மார்க் ஆண்டனி திரைப்படம் பக்கா மாஸ் ஆக்சன் என்டர்டெய்னர் படமாக, வித்தியாசமான டைம் டிராவல் கான்செப்டில் ஒரு பேண்டஸியான கேங்ஸ்டர் படம் என சொல்லும் அளவிற்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. கதாபாத்திரங்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஆக்சன் என கம்ப்ளீட் பேக்கேஜ் ஆக மார்க் ஆண்டனி திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.
பிளாக்பஸ்டர் ஹிட் படமாக திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த வெற்றியை பட குழுவினர் தற்போது கொண்டாடியுள்ளனர். இந்த வெற்றி விழாவில் பேசிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா அவர்களின் பங்கு குறித்து பேசினார். அப்படி பேசுகையில்,
“அவ்வளவு பவர்ஃபுல்லான ஒரு கதாபாத்திரம் இருக்கிறது ஒரு நட்சத்திர நடிகராக இருந்தும் திரையில் சக நடிகருக்கு அவருக்கான இடத்தை கொடுத்து நடிப்பதற்கு ஒரு தனி மனசு வேண்டும் அதற்காக விஷால் சாருக்கு நான் எப்போதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். நான் ஒரு எக்ஸென்ட்ரிக் என்றால் எஸ்.ஜே.சூர்யா சார் இரண்டு மடங்கு எக்ஸென்ட்ரிக் , எனர்ஜி காலை 6 மணிக்கு படப்பிடிப்பு தொடங்குவோம் மாலை 6 மணி வரைக்கும் படப்பிடிப்பு போகும் நாமெல்லாம் கொஞ்சம் சோர்வாகி விடுவோம் ஆனால் எஸ்.ஜே.சூர்யா சார், “வாங்க சார் வாங்க சார்” என எனர்ஜியோடு இருப்பார் எப்படி அவருக்கு மட்டும் அப்படி எனர்ஜி இருக்கிறது என்று தெரியவில்லை. அந்த எனர்ஜி குறையாமல் தினமும் எங்களுக்கு பயங்கரமான உந்துதலை கொடுத்துக் கொண்டிருந்தார். மிகவும் அர்ப்பணிப்போடு இருக்கக்கூடிய ஒரு நடிகர் அவர். படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பாக நானும் என்னுடைய அசோசியேட் இயக்குனரும் பாய், தலைகாணி எல்லாம் எடுத்துக்கொண்டு எஸ்.ஜே.சூர்யா சார் அவர்களது வீட்டில் தங்கி விடுவோம். “ஓகே ஓகே” படத்தில் சந்தானம் சார் காவல்துறை அதிகாரியிடம் “இதற்கு ஒரு எண்டே இல்லையா?” என பண்ணுவது போல போய்க் கொண்டே இருக்கும். விஷால் சாருக்கு இரண்டரை மணி நேரம் கதை சொன்னேன் தயாரிப்பாளருக்கு இரண்டரை மணி நேரம் கதை சொன்னேன் ஆனால் எஸ்.ஜே.சூர்யா சாருக்கு எட்டரை மணி நேரம் நான் கதை சொன்னேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், அவர் எவ்வளவு சந்தேகங்கள் கேட்டிருப்பார் என்று.. நன்றி எஸ்.ஜே.சூர்யா சார் உங்களுடைய பங்களிப்பு யாரோடும் ஒப்பிட முடியாதது மிக்க நன்றி சார்!” என பேசி இருக்கிறார். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசிய அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.