தென்னிந்திய திரை உலகில் முன்னணி நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக விளங்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 2021 ஆண்டு இறுதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

முன்னதாக இயக்குனர் செல்வராகவன் முதல்முறை நடிகராக களமிறங்கியுள்ள சாணிக் காயிதம் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்து வரும் சர்க்கார் வாரி பாட்டா படத்திலும் கதாநாயகியாக நடிக்கும் கீர்திசுரேஷ் மலையாளத்தில் டொவினோ தாமஸ் உடன் இணைந்து வாஷி படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கொரோனா வைரஸ் தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்,

தேவையான அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியும் லேசான அறிகுறிகளோடு எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, இந்த வைரஸ் எவ்வளவு வேகமாக பரவி வருகிறது என்பதை பயமுறுத்தும் வகையில் நினைவுறுத்துகிறது. 
தயவுசெய்து கோவிட் விதிமுறைகளை பின்பற்றுங்கள். என்னைத் தனிமைப் படுத்திக்கொண்டு பாதுகாப்போடு இருக்கிறேன். என்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள். 
யாராவது இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் இருந்திருந்தால் தயவு செய்து உடனடியாக தடுப்பூசி எடுத்துக் கொண்டால் நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் மோசமான பாதிப்பை தவிர்க்கலாம். 
விரைவில் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்புவேன் என்று எதிர்பார்க்கிறேன் 
அன்புள்ள 
கீர்த்தி சுரேஷ்
 

என தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் விரைவில் குணமடைந்து மீண்டுவர கலாட்டா குழுமம் சார்பாக வேண்டிக் கொள்கிறோம். 

கொரோனா வைரஸ் பரவலின் 3-வது அலையிலிருந்து நம்மை நாம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முக கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை சரியாக பயன்படுத்துங்கள். கட்டாயமாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்.