தமிழ் சினிமாவில் அட்டகாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நடிகர் சௌந்தரராஜா. சுந்தரபாண்டியன், தர்மதுரை, பிகில், ஜகமே தந்திரம் போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமடைந்தவர் நடிகர் சௌந்தரராஜா. குறிப்பாக சுந்தரபாண்டியன், தர்மதுரை ஆகிய படங்களில் சௌந்தரராஜா அவர்களின் கதாபாத்திரம் மிக முக்கியமான பங்களிப்பை கொடுத்து இன்றும் மக்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான சிலம்பரசன் TR நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றிருப்பார். திரைத்துறையில் வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரத்திலும் கச்சிதாமாக நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தற்போது இயக்குனர் அணில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் கட்டிஸ் கேங் என்ற மலையாளப் படத்தில் முக்கிய வில்லனாக நடித்து வருகிறார். ஓசியானிக் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் சுபாஸ் ரகுராம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் சௌந்தரராஜன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர். கதாநாயகனாக உன்னி லால் நடிக்க அவருக்கு ஜோடியாக விஷ்யமா நடிக்கின்றார். கட்டிஸ் கேங் என்றழைக்கப்படும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் நிகில் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் மும்முரமாக நடைபெற்று வறுகிறது.
இந்நிலையில் நடிகர் சௌந்தரராஜா அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடம் வலியுறுத்தும் நோக்கத்தில் கட்டிஸ் கேங் படக்குழுவினருடன் மரக்கன்றுகளை நட்டு இயற்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறார். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இந்த சமூக பணியில் நடிகர் சௌந்தரராஜா இறங்கியுள்ளதால் ரசிகர்கள் இவரை பாராட்டி வருகின்றனர்.
திரைபிரபலங்கள் இது போன்ற இயற்கை வளங்களை காக்கும் நோக்கத்தில் பல முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தில் ஆர்வம் எடுத்து இந்த செயலை செய்து வரும் நடிகர்களில் தற்போது சௌந்தரராஜன் அவர்களின் இச்செயலும் இடம் பெற்றுள்ளது.