தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன் நடிப்பில் சமீபத்தில், வெளிவந்த மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று மெகா ஹிட்டானது. பல தடைகளை கடந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான மாநாடு திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.

இதனை அடுத்து 3-வது முறையாக கௌதம் வாசுதேவ் மேனன் உடன் இணைந்துள்ள சிலம்பரசன் வெந்து தணிந்தது காடு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

மேலும் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் பத்து தல படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், திடீரென காய்ச்சல் காரணமாக நடிகர் சிலம்பரசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து நடிகர் சிலம்பரசனுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனையில் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. வைரஸ் காய்ச்சல் மற்றும் தொண்டையில் வைரஸ் தொற்றால் ஏற்பட்ட வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட சிலம்பரசன் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். 

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சமயத்தில் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, “உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் நன்றி..! வீடு திரும்பி விட்டேன்… குணமடைந்து வருகிறேன்! நீங்க இல்லாம நான் இல்ல!” என தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ட்ரெண்டாகும் சிலம்பரசனின் ட்விட்டர் பதிவு இதோ…