தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலிருந்து பொது தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்களை எடுத்த மாணவ மாணவியர்களை சந்தித்து அவர்களின் கல்வி ஊக்க தொகை வழங்கி அவர்களை கவுரவிக்கும் நிகழ்வு சென்னையில் தளபதி விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 6000 மாணவ மாணவியருக்கு விஜய் கல்வி விருது வழங்கி அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டார். இந்த செயல்பாடு பெருவாரியான பாராட்டுகளை விஜய்க்கு கொடுத்தது. விஜயின் மக்கள் பணி ரசிகர்களை தாண்டி தற்போது பொதுமக்களையும் சென்று தற்போது பேசு பொருளாகி வருகிறது. இந்த நிகழ்வு குறித்து பல அரசியல் ஆளுமைகள், திரை பிரபலங்களிடமிருந்து கருத்துகளுடன் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
இந்நிலையில் திரைகலைஞர் பிரபல நடிகர் சத்யா ராஜ் கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கௌசல்யா சங்கரின் ‘ழ’ என்ற அழகு நிலையத்தை திறந்து வைத்தார். பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சத்யா ராஜ் இந்த நிகழ்வு குறித்து பேசினார். இதில் தளபதி விஜயின் அரசியல் வருகையின் ஆரம்பமாக இந்த கல்வி விருது விழா இருந்ததா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சத்யராஜ்,
“விஜய் செய்தது நல்ல விஷயம். அவர் அரசியலுக்கு வருவது பற்றி எனக்கு தெரியாது. அவரே சொல்லாத போது நான் எப்படி சொல்ல முடியும்?” என்றார். மேலும் விழாவில் விஜய் மாணவ மாணவியர்களை பெரியார் அம்பேத்கர் காமராஜர் போன்ற தலைவர்களை வாசிக்க அறிவுறுத்தியது குறித்து கேட்கையில்,
“பெரியார், அம்பேத்கர், காமராஜர் முன்னுதரணமாக வைத்து பேசியது ரொம்ப நல்ல விஷயம். இளைய தலைமுறைக்கு அவர் பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். அவரே இதை சொன்னதை வரவேற்கிறோம்” எனப் பதிலளித்தார். மேலும் லியோ பட முதல் பாடல் குறித்த அறிவிப்பு போஸ்டரில் தளபதி விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிக்கு எழும் சர்ச்சை குறித்து கேட்கையில், “நடிகர்கள் பாத்திரங்களுக்கு தகுந்த மாதிரி சில விஷயங்களை செய்ய வேண்டியிருக்கும். படத்தில் வில்லனாக நடிக்கும் போது சிகரெட் பிடிப்பது போல நடித்துள்ளேன். படத்தில் பேசும் வசனங்கள் அந்த படக்கதைக்கு சம்மந்தமான வசனம். நான் கடத்தல்காரனாக நடித்த போது கடத்தல் செய்வது தவறு அல்ல என பேசியுள்ளேன். போலீசாக நடித்த போது சட்டப்படி நடந்து கொள்ள வேண்டுமென பேசியுள்ளேன்.” என்றார் நடிகர் சத்ய ராஜ். தற்போது சத்யராஜ் பேசிய வீடியோ இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.