இந்திய திரை உலகின் குறிப்பிடப்படும் சிறந்த நடிகர்களில் ஒருவராகத் திகழும் நடிகர் மாதவன் அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து மின்னலே, டும்டும்டும், கண்ணத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், ஆயுத எழுத்து என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.

தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் மாதவன் தொடர்ந்து நடித்து வருகிறார். இதனையடுத்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள நடிகர் மாதவன் இந்தியாவின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான நம்பி நாராயணன் அவர்களின் பயோபிக் திரைப்படமாக உருவாகியிருக்கும் ராக்கெட்ரி திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார்.

தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள ராக்கெட்ரி திரைப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாதவனின் ராக்கெட்ரி திரைப்படம் வருகிற ஜூலை 1ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

நடிகர் மாதவனின் மகனான வேதாந்த் மாதவன் நீச்சல் வீரராக அசத்தி வருவது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் வேதாந்த் மாதவன் இந்தியாவிற்காக வெள்ளி பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்காக வெள்ளிப்பதக்கம் வென்ற வேதாந்த் மாதவன் கூடிய விரைவில் இந்தியாவிற்காக ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைக்க வேண்டும் என கலாட்டா குழுமம் சார்பாக வாழ்த்துகிறோம்.