"எதிர்நீச்சல்" சீரியலின் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் மனங்களிலும் குடியேறிய நடிகர் மாரிமுத்து திடீரென இன்று செப்டம்பர் 8ம் தேதி மாரடைப்பால் காலமானார். தனது திரைப் பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் ராஜ்கிரன், மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரிமுத்து அவர்கள் பின்னர் நடிகராகவும் பல படங்களில் குறிப்பிடப்படும் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். மேலும் இயக்குனராகவும் கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் உள்ளிட்ட திரைப்படங்களை மாரிமுத்து இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் மற்றும் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியிருக்கும் ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் மிக முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் நடிகர் மாரிமுத்து அவர்கள், அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இதனிடையே 57 வயதாகும் நடிகர் மாரிமுத்து இன்று திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை தனது டப்பிங் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நடிகர் மாரிமுத்துவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் 8.30 மணி அளவில் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் மாரிமுத்து அவர்களின் மகன் தனது தந்தையின் இறப்பு செய்தி குறித்து பகிர்ந்து கொண்டார். மேலும் இறுதி சடங்குகள் நடைபெறும் இடம் மற்றும் இதர விவரங்களை பகிர்ந்து கொண்ட அவர் ஊடகத்துறையினருக்கும் காவல்துறையினருக்கும் நன்றி தெரிவித்து பேசி இருக்கிறார். அப்படி பேசுகையில்,
“அப்பா இன்று காலை 8:30 மணி அளவில் இயற்கை எய்தினார். கடந்த 25 - 30 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறார். இன்று காலையில் இருந்து நிறைய பேர் வந்து சென்றிருக்கிறார்கள். அது அவர்கள் அப்பா மீது வைத்திருக்கும் அன்பும் அக்கறையும் தான் அவர்கள் எல்லோருக்கும் நன்றி. நாளை காலை 10 மணி அளவில் அப்பாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் வரசநாடில் இறுதி ஊர்வலமும் அடக்கமும் செய்ய இருக்கிறோம். கடந்த இரண்டு வருடங்களாக எதிர்நீச்சல் மெகா தொடரில் இருந்து அப்பாவுக்கு கிடைத்த வரவேற்பை நானும் எங்கள் குடும்பமும் எதிர்பார்க்கவே இல்லை. அந்த அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. என்ன சொல்வது என்று தெரியவில்லை மிகவும் கஷ்டமாக இருக்கிறது. மீடியா நண்பர்கள் மற்றும் காவல்துறை, இன்று காலையிலிருந்து எங்கள் கூடவே நின்று உதவி செய்த எல்லோருக்குமே மனமார்ந்த நன்றி நாளை காலை இறுதி சடங்கு நடைபெறும் லொகேஷன் மீடியாக்களுக்கு அனுப்பி இருக்கிறோம். அப்பாவின் சொந்த வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் எடுத்துச் செல்ல போகிறோம். ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் மிகவும் நன்றி!" என பேசி இருக்கிறார். மறைந்த நடிகர் மாரிமுத்துவின் மகன் பேசிய இந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.