“காதல் திருமணத்தை” இளைஞர்களை விட, இளம்பெண்களே விரும்புகின்றனர்! ஆய்வில் தகவல்..
By Aruvi | Galatta | Jun 09, 2020, 04:20 pm
“காதல் திருமணத்தை” இளைஞர்களை விட, இன்றைய இளம் பெண்களே விரும்புகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் தீவிரமாக ஒரு பக்கம் பரவி வந்தாலும், இன்னொரு பக்கம் அதனைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமாகப் போராடி வருகின்றன.
இது ஒரு பக்கம் என்றாலும், சில தனியார் நிறுவனங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தங்களது வேலையைத் தொடர்ந்து செய்துவருகின்றனர்.
இதனிடையே யூகவ், மின்ட், சிபிஆர் ஆகிய நிறுவனங்கள் இந்த கொரோனா காலத்தில் திடீர் ஆய்வில் ஈடுபட்டன.
இந்த ஆய்வானது, 23 வயதுக்கு உட்பட இளைஞர்கள் மற்றும் 24 வயது முதல் 39 வயதுக்கு உட்பட இளைஞர்களின் மனநிலையை அறியும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வில், மாதம் 60 ஆயிரத்திற்கும் மேல் சம்பாதிப்பவர்களில் 21 சதவீதம் பேர்; தங்களுக்குத் திருமணத்தில் விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மாதம்தோறும் 25 ஆயிரம் ரூபாய்க்குள் சம்பாதிப்போரிடம் நடத்தப்பட்ட ஆய்வில்; 25 விழுக்காட்டினர் திருமணம் வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.
மாதம் 10 ஆயிரத்திற்கும் குறைவாகச் சம்பளம் பெறும் ஆண்கள்; 39 சதவீதம் பேர் திருமணமே வேண்டாம் என்ற விரக்தியான மனநிலையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.
அதேபோல், மாதம் 60 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிப்போரில் 19 சதவீதம் பேர் திருமணத்திற்குப் பிறகு குழந்தை வேண்டாம் என்று கூறி அதிர்ச்சி
அளித்துள்ளனர். மாதம் 25 ஆயிரத்திற்குள் சம்பாதிக்கும் ஆண்கள்; 20 சதவீதம் பேரும், மாதம் 10 ஆயிரத்திற்குள் சம்பாதிக்கும் ஆண்கள்; 4 ல் ஒருவர் குழந்தை வேண்டாம் என்ற மனநிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக சொந்த மதம் மற்றும் சாதியை சேர்ந்தவர்களையும்; சொந்த தாய் மொழியைச் சேர்ந்தவர்களையும் திருமணம் செய்துகொள்ள 30 சதவீதம் ஆண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மேலும், 24 வயது முதல் 39 வயதுக்குப்பட்டோர் சுமார் 62.3 சதவீதம் பேர் காதல் திருமணத்தையே விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். இதில், 37.7 சதவீதம் பேர் மட்டுமே நிச்சயிக்கப்பட்ட திருமணம் வேண்டும் என்று கூறியுள்ளனர். அத்துடன், 23 வயதுக்குப்பட்டோரில், 10ல் 7 பேர் காதல் திருமணம் தான் மகிழ்ச்சியைத் தரும் என்றும், அதனால் காதல் திருமணத்தையே விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.
குறிப்பாக, ஆண்களை விட பெண்களே காதல் திருமணத்தை இன்னும் அதிகம் விரும்புவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இளம் பெண்களில் 49 சதவீதம் பேர் காதல் திருமணத்தையே விரும்புவதாகக் கூறியுள்ளனர். அதிலும் குறிப்பாக, 30 சதவீதம் இளம் பெண்கள், வாழ்க்கையில் திருமணமே வேண்டாம் என்ற விரக்தியான முடிவில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
அதேபோல், ஆண்களில் 26.5 சதவீதம் பேர் திருமணமே வேண்டாம் என்கிற மனநிலைக்கு வந்துள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த ஆய்வின் முடிவில் திருமணமும் வேண்டாம், குழந்தையும் வேண்டாம் என்கிற முடிவில் பெரும்பாலான இளைஞர்கள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.