சென்னை சவுகார்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மருமகள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 74 வயதான தலில் சந்த் என்பவர், சென்னை சவுகார்ப்பேட்டையில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். 

அதே நேரத்தில், தலில் சந்த் சென்னை வால்டாக்ஸ் சாலை விநாயகர் மேஸ்திரி தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 70 வயதான மனைவி புஷ்பா பாய், 38 வயதான மகன் ஷீத்தல் ஆகியோருடன் வசித்து வந்தார். இவருடைய 35 வயதான மகள் பிங்கி, திருமணமாகி பேசின்பிரிட்ஜ் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில். நேற்று முன் தினம் மாலை 74 வயதான தலில் சந்த், மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் ஆகிய 3 பேரும் உடம்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் வீட்டில் உள்ள படுக்கை அறையில் சடலமாக கிடந்தனர். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், சென்னையில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இது குறித்து யானைக்கவுனி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தினர். அத்துடன், அந்த வழக்கில் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு 5 தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது, அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையிலும்,  கொலை செய்யப்பட்ட தலில் சந்தின் மகள் பிங்கி மற்றும் குடியிருப்பு வாசிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல தகவல்கள் கிடைக்கப் பெற்றன. 

அதன் படி, குடும்ப பிரச்சினையில் ஷீத்தலின் மனைவி ஜெயமாலா தனது சகோதரர்கள் கைலாஷ், விகாஷ் உள்ளிட்டோருடன் இணைந்து, இந்த கொடூர கொலைகளை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், “ஜெயமாலா மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்தவர்” என்பது தெரிய வந்தது.

ஜெயமாலாவுக்கும், ஷீத்தலுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், அவர்கள் முதலில் புனேயில் சில ஆண்டுகள் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன், இந்த தம்பதிக்கு இடையில் பல விதமான கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால், கணவன் ஷீத்தலுடன் வாழ பிடிக்காமல், அவர் மனைவி ஜெயமாலா, புனே நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். 

அந்த விவகாரத்து மனுவில், “எனக்கு ஜீவனாம்சமாக 5 கோடி ரூபாய் தர வேண்டும்” என்றும், அவர் கூறி இருந்தார்.

இதன் காரணமாக, இரு வீட்டாருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சினை இருந்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் மாதம் ஷீத்தலின் தந்தை தலில் சந்த், தனது உறவினர்களுடன் புனே சென்று ஜெயமாலா குடும்பத்தினரை கடுமையாக எச்சரித்து வந்ததாக கூறப்படுகிறது. பதிலுக்கு ஜெயமாலா உறவினர்கள், சகோதரர்கள் கைலாஷ், விகாஷ் ஆகியோர் கடந்த மாதம் சென்னை வந்து தலில் சந்த் குடும்பத்தினரிடம் கடும் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. 

கணவன் மனைவியான ஷீத்தல் - ஜெயமாலா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, இருவர் குடும்பத்தினர் இடையே தொடர்ந்து மிகப் பெரும் பகையை வளர்த்து வந்து உள்ளது. 

இப்படியாக, பகை பெரிதாகவே மனைவி ஜெயமாலா, தனது சகோதரர்கள் கைலாஷ், விகாஷ், இன்னும் 2 உறவினர்கள் என மொத்தம் 5 பேர் சேரந்து நேற்று முன் தினம் ஷீத்தல் வீட்டுக்கு வந்து உள்ளனர்.

அப்போது, வீட்டில் அவரது மாமனார் தலில் சந்திடம், “உடல் குறைபாடு உள்ள மகனை திருமணம் செய்து வைத்து என் வாழ்க்கையைச் சீரழித்து விட்டீர்கள் என்றும், இதனால் எனக்கும், என்னுடைய குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகவும் 5 கோடி ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டும்” என்றும், கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அத்துடன், “சொத்திலும் பங்கு தர வேண்டும்” என்றும், கேட்ட ஜெயமாலா மாமனாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு ஆதரவாக அவருடைய சகோதரர்களும், உறவினர்களும், வீட்டின் முன்பு சத்தமாக குரல் கொடுத்ததாகவும் தெரிகிறது.

அப்போது, தாங்கள் மறைத்து வைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டியாவது மாமானாரிடமும், கணவனிடமும் சாதித்து விடலாம் என்று ஜெயமாலா குடும்பத்தினர் துப்பாக்கியைத் தூக்கி காட்டி மிரட்டி உள்ளனர். 

இதைப்பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த தலில் சந்த், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதனால், இன்னும் ஆத்திரம் அடைந்த ஜெயமாலா குடும்பத்தினர், துப்பாக்கியை எடுத்து 3 பேரையும் அடுத்தடுத்து சுட்டக்கொன்றதாகவும் கூறப்படுகிறது. 

இதில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேரும் உயிரிழந்ததும், ஜெயமாலாவும், அவருடைய உறவினர்கள், சகோதரர்களும் எந்தவித பதற்றமும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

மேலும், அவர்கள் அனைவரும் முககவசம் அணிந்திருந்ததாலும், நடை, உடை, பாவனைகளை வைத்து வீட்டில் இருந்து வெளியே சென்றது ஜெயமாலாதான் என்பதை தலில் சந்தின் மகள் பிங்கி உறுதிப்படுத்தினார். அதன் பேரில், போலீசார் அவர்கள் சென்ற வழி முழுவதும் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க ஜெயமாலா குடும்பத்தினர் காரில் ஒரு குழுவாகவும், ரயிலில் ஒரு குழுவாகவும் பிரிந்து சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் விமானம் மூலம் புனே சென்றனர். 

இந்நிலையில் தான், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், ஷீத்தல் குமாரின் மனைவி ஜெயமாலா மற்றும் அவரது உறவினர்கள் என மொத்தம் 3 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, மருமகள் ஜெயமாலா, சகோதரர் கைலாஷ் உள்பட 3 பேர் புனேவில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்து உள்ளார்.