“கொரோனா தடுப்பு பணிகள் தமிழகத்தில் பாதிப்பா?” 3 நாள் தடுப்பூசி போடுவது நிறுத்தம்
By Aruvi | Galatta | Jun 01, 2021, 01:24 pm
தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு தீர்ந்து போனதால், வரும் 3 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்குத் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பரவிக்கொண்டு இருக்கும் கொரோனா தொற்றின் 2 வது அலையைக் கட்டுப்படுத்தும் விதமாக, கொரோனா தடுப்பு பணிகள் முழு வீச்சில் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அதன் ஒருபகுதியாக, தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தற்போது தீவிரமாக அடைந்து உள்ளது.
இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கொரோனா தடுப்பூசி சேமிப்பு கிடங்கில், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் தற்போதைய கையிருப்பாக 4.93 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளதாக” குறிப்பிட்டார்.
“அதில், சுமார் 2.69 லட்சம் தடுப்பூசிகள் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கும், 2.24 லட்சம் தடுப்பூசிகள் 45 வயதுக்கு மேற்பட்டோருக்குமான ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும், அதன் படி, நாளொன்றுக்கு 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன” என்றும், அவர் கூறினார்.
“அந்த வகையில் பார்க்கும் போது, சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் தேவையான தடுப்பூசிகள் இன்றுடன் முடிந்துவிடும் என்றும், மாவட்ட ஒதுக்கீடு என்ற அளவிலும் தடுப்பூசிகள் முடிந்துள்ளன” என்றும், அவர் கவலைத் தெரிவித்தார்.
“ஆகவே, நமக்குக் கிடைத்த தடுப்பூசிகள் முழுமையாகப் பயன்படுத்தி முடிப்பதற்கான உரிய அறிவுரைகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும், கடந்த மே மாதம் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை 20.43 லட்சம் மட்டுமே” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
“ஆனால், இது வரை நமக்கு 18.68 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வந்துள்ளது என்றும், கடந்த மே மாத கணக்கில் நமக்கு இன்னும் 1.74 லட்சம் தடுப்பூசிகள் வந்து சேர வில்லை” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், மே மாத கணக்கில் வர வேண்டிய அந்த பாக்கி தடுப்பூசிகள் எப்போது வரும்? என்பதை, மத்திய அரசு இன்னும் நமக்குச் சொல்லவில்லை” என்றும், அவர் குறிப்பிட்டுப் பேசினார்.
அதே போல், நேற்றைய தினம் மத்திய சுகாதாரத்துறை செயலாளருடனான காணொலிக்காட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக சுகாதாரத்துத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “ஜூன் மாதத்தில் 42.58 லட்சம் தடுப்பூசிகள் நமக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசு கூறியதாகவும்” தெரிவித்தார்.
“ஆனால், முதல் சப்ளை ஜூன் 6 ஆம் தேதிக்கு பிறகும், இன்னொரு சப்ளை ஜூன் 9 ஆம் தேதி அன்றும் வரும் என்று மத்திய அரசு தரப்பில் சொல்லப்பட்டு இருப்பதாகவும்” அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே கூடுதல் தடுப்பூசி வழங்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதன்படியே, கடந்த மாதங்களைக் காட்டிலும், தற்போது இரு மடங்கு அதிகமாக தடுப்பூசியானது தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது.
எனினும், இதர மாவட்டங்களில் தேவையான தடுப்பூசிகள் இன்றுடன் முடிந்துவிடும் என்றும், மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய தேவையான தடுப்பூசிகள் வரும் 6 ஆம் தேதிக்கு பிறகும் தான் வரும் என்பதால், நாளை அல்லது 3 ஆம் தேதி முதல், அடுத்து வரும் 3 நாட்களுக்குத் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படுவதாகவும்” சுகாதாரத்துத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளது, தமிழகத்தில் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் அப்படியே, முழுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக இணையத்தில் ஒரு பெரும் விவாதமே போய் கொண்டிருக்கிறது. அத்துடன், தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு, காலம் தாழ்த்தாமல் உடனே வழங்க வேண்டும் என்றும், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.