கொரனா வைரஸ்.. உலக அவசர நிலையாக பிரகடனம்!
By Aruvi | Galatta | 03:56 PM
கொரனா வைரஸ் பிற நாடுகளில் பரவி வருவதால், உலக அவசர நிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உருவாகி, இன்று உலகம் முழுக்க பரவி வருகிறது கொரனா வைரஸ். இந்த நோய்க்குச் சீனாவில் மட்டும் கிட்டத்தட்ட 213 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், கிட்டதட்ட 8 ஆயிரத்து 100 பேருக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 500 பேரின் நிலைமை, மிகவும் அபாய கட்டத்தில் உள்ளதாகவும் சீனாவிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே, சீன பெருஞ்சுவரைத் தாண்டி, இந்த நோய் இன்று உலகம் முழுக்க பரவி வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா, தாய்லாந்து சிங்கப்பூர் ஆஸ்திரேலியா என இதுவரை 22 நாடுகளுக்கு கொரனா வைரஸ் பரவியுள்ளது.
இந்த கொரனா வைரஸ் 23 வது நாடாக இந்தியாவிற்குள், தற்போது பரவி உள்ளது. இதனால், இந்தியர்கள் அதிர்ச்சியிலும், பீதியிலும் உரைந்துள்ளனர்.
இதனிடையே, கொரனா வைரஸ் உலக நாடுகளைத் தாக்கி வருவதால், உலக அவசர நிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், '' சரியான சுகாதார வசதிகள் இல்லாத நாடுகளில், கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற கவலையால், உலக சுகாதார நிறுவனம் இந்த அவசர நிலையை அறிவிப்பதாக” கூறினார்.
“இந்த அவசர நிலை அறிவிப்புக்கு முக்கிய காரணம், சீனாவில் நடந்து வரும் சம்பவங்கள் மட்டுமல்ல, உலகின் மற்ற நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள் தான் காரணம்'' என்றும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, உலக அளவில் சுகாதார அவசரநிலை பிரகடன அறிவிப்பை, உலக சுகாதார அமைப்பு வெளியிடுவது இது 6 வது முறையாகும்.