அதிமுக ஆட்சிக்கால நிதிநிலை - வெள்ளை அறிக்கை வெளியீடு! தமிழக அரசியலில் பரபரப்பு..
“தமிழ்நாட்டில் தலா ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2,63,976 ரூபாய் கடன் உள்ளது” என்று, கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கவலைத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுக்கு வந்த திமுக, முதலில் நிதிநிலை அறிக்கையை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தது. இதனால், “தமிழகத்தில் விரைவில் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும்” என அறிவித்தது.
இந்த நிலையில், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமையை விளக்கும், வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தற்போது வெளியிட்டுள்ளார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த போது, தமிழ்நாடு அரசின் கடன் சுமை 1.14 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது” என்று, குறிப்பிட்டார்.
“கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் 2.28 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும், தற்போது 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசின் 10 ஆண்டு முடிவில், தமிழ்நாட்டின் கடன் 4.85 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து விட்டது” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், “தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும், தமிழ்நாடு அரசின் வருமானம் மிகவும் குறைந்துள்ளது என்பது முக்கிய பிரச்சனை” என்றும், அவர் குறிபிட்டு பேசினார்.
குறிப்பாக, “கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டு வரை, திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் வருவாய் உபரியாக இருந்தது என்றும், ஆனால் கடைசி 5 ஆண்டுகளில் அதிமுக அரசின் வருவாய் பற்றாக்குறை ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடியாக அதிகரித்து, தமிழக அரசின் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலை அதிமுக ஆட்சியில் இருந்தது” என்றும், பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
“வருவாய் பற்றாக்குறையே 1.50 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததால், நிதிப் பற்றாக்குறை அதை விட பலமடங்கு உயர்ந்து விட்டது என்றும், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு அரசின் வருவாய் 4 ல் ஒரு மடங்கு குறைந்து விட்டது” என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த 2020 - 2021 ல் மட்டும் வருவாய் பற்றாக்குறை 61,320 கோடி ரூபாய் என்றும், ஏற்கனவே தமிழ்நாடு பொருளாதாரம் பலவீனமாக இருந்த நிலையில், கொரோனா செலவும் சேர்ந்ததால் நிதி நிலை இன்னும் மோசமானது” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
“கடைசி 5 ஆண்டுகளில் பொதுக்கடன் மட்டும் 3 லட்சம் கோடி ரூபாய்” அவர் கூறியுள்ளார்.
மிக முக்கியமாக, “தமிழ்நாட்டில் தலா ஒவ்வொரு குடும்பத்தின் மீது 2,63,976 ரூபாய் பொது சந்தாக்கடன் உள்ளது” என்றும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கவலைத் தெரிவித்துள்ளார்.
அதே போல், “தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் 5,70,189 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது என்றும், அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் சுமை குறித்த கணக்கு சரிவர பராமரிக்கப்படவில்லை” என்றும், அவர் குற்றம்சாட்டினார்.
“தமிழ்நாடு அரசின் நிதிப்பற்றாக்குறை 5.24 லட்சம் கோடியாக உள்ளது என்றும், அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டின் போது நிதிப் பற்றாக்குறை 4.85 லட்சம் கோடி ரூபாய் என கூறப்பட்டது என்றும், அதிமுக அரசால் அளிக்கப்பட்ட கடன் உத்தரவாதத்தில் 90 சதவீதம் மின்வாரியத்துக்கே அளிக்கப்பட்டு உள்ளது” என்றும், அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக, “இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை” என்று, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும், “தமிழ்நாட்டில் முறையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் அரசுக்கு 2,577 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டி உள்ளார்.