தமிழகம் முழுவதும் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்கு விழா தொடங்கி உள்ளது.

voter

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம்  பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற்றது. 12 ஆயிரத்து 819 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு அமைதியான முறையில் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தி முடித்தது.

மொத்தம் உள்ள 1,373 மாநகராட்சி வார்டுகளில் 4 வார்டுகளில் போட்டியின்றி கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோன்று 3,843 நகராட்சி வார்டுகளில் 18 வார்டுகளிலும், 7,621 பேரூராட்சி வார்டுகளில் 196 வார்டுகளிலும் கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 7 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை கடந்த 22-ந்தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இந்நிலையில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா தற்போது தொடங்கியது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநகராட்சி, நகராட்சிகளின் கமிஷனர்கள் மற்றும் பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் செய்துள்ளனர். இதனிடையே மதுரை மாநகராட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு விழா தொடங்கியது. மாமன்ற உறுப்பினர்களுக்கு மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

அதனைத்தொடர்ந்து  தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்களுக்கு அந்தந்த மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்களும், பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு அந்தந்த பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களும் பதவி பிரமாணம் செய்து வைத்து வருகிறார்கள். ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களும் 35 வினாடிகள் கொண்ட உறுதிமொழியை தனித்தனியாக எடுத்துக்கொண்டு பொறுப்பேற்கிறார்கள்.

மேலும்  மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மேயர் தேர்தலும், பிற்பகல் 2.30 மணிக்கு துணை மேயர்களும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதேபோன்று நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்வு நடக்கிறது. போட்டியிருப்பின் தேர்தல் நடைபெறும். போட்டி இல்லாத பட்சத்தில் ஒருமனதாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை தொடர்ந்து அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்கள் சரிசமமாக பொறுப்பேற்கிறார்கள். பதவி ஏற்பு விழாவுக்காக அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களின் மன்ற அரங்கம் புதுப்பொலிவுடன் தயாராக உள்ளது.