“சங்கமிப்போம் சாதிப்போம்” அதிமுக பொதுச்செயலாளர் அடையாளத்தோடு சசிகலா தொண்டர்களுக்கு கடிதம்..
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, அதிமுக. கழகப் பொதுச்செயலாளர் என்ற அடையாளத்துடன் “சங்கமிப்போம் சாதிப்போம்” என்று, தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவின் பொன்விழா ஆண்டையொட்டி, நேற்று முன் தினம் தனது இல்லத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு, சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு, அதிமுக கொடிகட்டிய காரில், எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்குச் சென்ற சசிகலா, அங்கு அதிமுகவின் கொடியை ஏற்றி வைத்தார்.
அத்துடன், யாரும் எதிர்பாராத விதமாக, பொன்விழா ஆண்டு கொடியேற்றும் நிகழ்வையொட்டி கல்வெட்டையும் சசிகலா அப்போது அங்கு திறந்து வைத்தார்.
அந்த கல்வெட்டில், “அதிமுகவின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா” என்று பொறிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஓபிஎஸ் - இபிஎஸ் அணியினர், இப்போது வரை சசிகலா அதிமுகவைச் சேர்ந்தவர் இல்லை என்பதில் உறுதியாக இருந்து வருவதுடன், அது தொடர்பான விமர்சனங்களையும் செய்து வருகின்றனர்.
எனினும், இன்றும் அதே பொதுச் செயலாளர் என்ற அடையாளத்துடன் சசிகலா, அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை தற்போது எழுதி உள்ளார்.
அதிமுக தொண்டர்களுக்கு வி.கே.சசிகலா எழுதி உள்ள கடிதத்தில், “கழகம் நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காது தொடர்வோம் வெற்றிப்பயணத்தை. ஒன்றுபடுவோம்.. வென்றுகாட்டுவோம்” என்று, குறிப்பிட்டிருக்கிறார்.
குறிப்பாக, “புரட்சித்தாய் மடல்” என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த கடிதத்தில், “கழகத்தின் பாதையில் புரட்சித் தலைவர் காணாத சோதனையா? புரட்சித்தலைவி, அம்மா காணாத இடர்பாடா? அத்தனை தடைகளையும் உடைத்து அவர்கள் கழகம் காத்த காலத்தை நாமறிவோம்” என்றும், கூறியுள்ளார்.
மேலும், “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இது நாம் அறிந்தது தானே.. வெல்வோம் சகோதர்களே. நான் இருக்கிறேன் என்பதை விடவும் நாமிருக்கிறோம்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
அத்துடன், “ஆதிக்கம் ஒருநாள் மக்களிடம் மண்டியிடும். அம்மா பாதையில் மக்கள் மனம் வெல்வோம். ஒன்றுபடுவோம். வென்று காட்டுவோம்” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.
“பொன்விழா பிறக்கும் இந்த நாள், கழகத்தின் வரலாற்றில் புது நாளாகட்டும். நம் தலைவர்கள் காட்டிய பாதையில் தொய்வில்லாமல் மக்களுக்காகப் பயணிப்போம். சங்கமிப்போம். சாதிப்போம். தொண்டர்களின் துணையோடும் மக்களின் பேராதரவோடும் மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்” என்றும், சசிகலா அந்த கடிதத்தில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.