மு.க.ஸ்டாலினுக்கு விஜய்சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்ட 67 பேர் கடிதம்! 14 கோரிக்கைகள்.. “அது என்ன?”
By Aruvi | Galatta | May 06, 2021, 01:22 pm
நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றி மாறன், ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், பேராசிரியர் வசந்தி தேவி உள்ளிட்ட 67 பேர், முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு சுற்றுச்சூழல் கோரிக்கைகள் அடங்கிய அவசர கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு 159 தொகுதிகளைக் கைப்பற்றி திமுக அமோக வெற்றி பெற்று இந்த முறை ஆட்சியமைக்கிறது.
கடந்த 50 ஆண்டு காலமாகத் தீவிர அரசியலில் மு.க.ஸ்டாலின் இருந்து வந்தாலும், இப்போது தான் முதல் முறையாக முதலமைச்சராக அரியணை ஏறவிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
அதன் படி, நாளைய தினம் வெள்ளிக் கிழமை காலை 9 மணிக்கு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்கிறார். இதனால், முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலினை, சந்தித்து தமிழ் சினிமா திரைப்பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த வாழ்த்துக்களோடு, “முடங்கிப் போயிருக்கும் சினிமா துறைக்கு உதவி செய்யுமாறும்” அவர்கள் தொடர்ந்து கோரிக்கையும் விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறன் உள்பட 67 பேர் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர்.
அந்த கடிதத்தில், “மதிப்பிற்குரிய முதல் அமைச்சர் அவர்களே, உங்கள் பாராட்டத்தக்க வெற்றிக்கு உங்களுக்கும் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள். நாங்கள், கீழே கையெழுத்திட்டுள்ள சமூக / சுற்றுச்சூழல் நீதி ஆர்வலர்கள், திராவிட, சமூக நீதிக் கொள்கைகள் மத பெரும்பான்மை அரசியல், சாதி அரசியல் மற்றும் மொழி வெறியைத் தோற்கடித்திருப்பதில் குறிப்பாக மகிழ்ச்சிக் கொள்கிறோம்.
கூட்டாட்சி கொள்கைகளை முன்னிறுத்தி மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவளிப்போம்.
கொரோனா வைரஸ் நெருக்கடியின் வேர்கள் வளர்ச்சியின் பெயரில் நிலத்தை - அழிக்கும் திட்டங்களில் உள்ளது. ஆனால், இந்த கொடும் நெருக்கடி கூட, உலகளாவிய சூழலியல் சரிவினால் வரப்போகும் பிரச்சனைகளுக்கான ஒரு தொடக்கக்காட்சி மட்டுமே.
கனமழை, வெப்ப அலைகள், நீண்டகால வறட்சி மற்றும் சூறாவளிகள் போன்ற கடுமையான வானிலை நிகழ்வுகள் புதிய இயல்பு நிலையாக மாறும். 1000 கிலோ மீட்டர் கடற்கரை கொண்ட தமிழகம், கடல் மட்டம் உயர்வினால் ஏற்படக்கூடிய உப்புத் தண்ணீர் ஊடுருவல் மற்றும் நில இழப்பினால் குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய நிலப்பகுதியாகும்.
நமது நிலத்தின் அழிவை நாம் நிறுத்தவில்லையெனில் இந்த இயற்கை நிகழ்வுகளினால் தமிழகம் சந்திக்கக்கூடிய பாதிப்புகள் கூடிக்கொண்டே போகும்.
உங்கள் ஆட்சி கூட்டணி சமத்துவம், பன்முகத்தன்மை, சூழலியல் நிலைத்தன்மை போன்ற கொள்கைகளுக்கு ஆதரவளித்து, சூழலியல் பாகுபாடு மற்றும் அநீதிக்கு எதிராகத் தைரியமாகக் குரல்கொடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மமக மற்றும் இடதுசாரி கட்சிகளை உள்ளடக்கியது.
நாட்டில் வலிமையான சுற்றுச்சூழல் சட்டங்களைக் கொண்டுவந்து வளர்ச்சித் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய நேரத்தில், EIA மற்றும் கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பானைப் போன்ற சட்டங்கள் அளிக்கும் கொஞ்சநஞ்ச பாதுகாப்பையும் மேலும் குறைப்பதில் மத்திய அரசு பரபரப்பாகச் செயல்பட்டு உள்ளது.
சுற்றுச்சூழல் சீரழிவு ஏழை மக்கள், வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களை அளவுக்கதிகமாக பாதிக்கும். சமத்துவம் மற்றும் சமுகநீதிக் கொள்கைகளுக்கு உண்மையாக இருக்க வேண்டுமெனில், தமிழ்நாடு இன்னும் வலிமையான சட்டங்களை நிறைவேற்றி, மத்திய சட்டங்களில் இல்லாத தகுந்த சூழலியல் மேற்பார்வையை இங்கு கொண்டுவர வேண்டும்.
குறிப்பாக, கீழ்க்கண்டவற்றை உறுதிப்படுத்துமாறு உங்களை வலியுறுத்த விரும்புகிறோம். இதில் குறிப்பிட்ட திட்டங்களைப் பற்றி மற்றும் இல்லாமல், கொள்கை மாற்றத்தின் அளவிலும் கோரிக்கைகள் உள்ளன.
அதன் படி,
- வேதாந்தா காப்பர் ஆலை திறக்கப்படக்கூடாது. அந்த கம்பெனி மற்றும் அதன் இயக்குனர்கள் மீது அவர்களின் சுற்றுசூழல் குற்றங்களுக்கு குற்றவியல் வழக்குகள் தொடரப்படவேண்டும்.
- சுற்றுச்சூழலை சீரழிக்கும் சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை திட்டம், காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம், கன்னியாகுமரி சர்வதேச கொள்கலன் முனையம், சித்தூர் - தச்சூர் 6 வழி சாலை திட்டம் மற்றும் கூடன்குளத்தில் அமைக்கப்படவிருக்கும் கூடுதலான நான்கு அணு உலைகள் ஆகியவற்றை நிறுத்த வேண்டும்.
- வேடந்தாங்கல் சரணாலயத்தின் எல்லைக் குறைப்பு மற்றும் பழவேற்காடு சரணாலயத்தில் பாதுகாப்புக்குட்பட்ட இடைப்பகுதியை குறைப்பதற்கு முந்தைய அரசின் கோரிக்கைகளை திரும்பப்பெற வேண்டும்.
- இந்துஸ்தான் யூனிலெவரின் பாதரச கழிவுகள் கொண்ட கொடைக்கானல் தொழிற்சாலைப் பகுதி சர்வதேச தரநிலைகளை பின்பற்றி தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.
- மரபணு மாற்று விதைகளை அனுமதிக்காதீர்
- நிலத்தடி நீரின் வணிகரீதியான பயன்பாட்டை கட்டுப்படுத்த கடுமையான விதிகளை உள்ளடக்கிய விரிவான நிலத்தடி நீர் சட்டத்தை கொண்டுவர வேண்டும்.
- பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் நகர மக்களை சூழலியல் மற்றும் வாழ்வாதார பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய தூர பகுதிகளுக்கு வெளியேற்றுவதற்கு எதிராகவும், நகர ஏழை மக்களின் பொருளாதார எதிர்பார்ப்புகளுக்கு முக்கியத்துவம் தந்து, சமத்துவமாக சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளை சரிசெய்வதற்காகவும் விரிவான கொள்கைகளை கொண்டுவர வேண்டும்.
- CRZ மற்றும் EIA அறிவிப்புகளின் லட்சியங்களை வலிமைப்படுத்தி அடைவதற்கு மாநில அளவில் சட்டங்களை நிறைவேற்றுதல்.
- தங்கள் அதிகார வரம்பிற்குள் நடக்கும் சூழலியல் சீரழிக்கும் நடவடிக்கைகளை கண்காணித்து, அவற்றுக்கு எதிராக செயல்பட பஞ்சாயத்து மற்றும் வார்டு அளவிலான கமிட்டிகளை வலிமைப்படுத்தி அவற்றின் திறனை மேம்படுத்த வேண்டும்.
- சீரழிந்த நிலம் மற்றும் நீர்நிலைகளை சரிசெய்யவும், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் இயற்கை பேரிடர்களை கணித்து எதிர்க்கொள்ளவும், அதிகம் நீர் பயன்படுத்தாத, ஆர்கானிக் விவசாயத்தை ஊக்குவிக்கவும் மாநில அளவில் திட்டங்கள் செயல்படுத்துதல்.
- டெல்டாவில் ஹைட்ரோகார்பன் சுரண்டலுக்கு எதிரான உறுதிமொழியை வலிமைப்படுத்துதல் - அனைத்து டெல்டா மாவட்டங்கள் மற்றும் அனைத்து ஹைட்ரோகார்பன் நடவடிக்கைகளையும் உள்ளடக்குதல், சுத்திகரிப்பு மற்றும் செயலாக்கம் உட்பட.
- தமிழகத்தின் ஆறுகளுக்கு நீராதாரமாக இருக்கும் கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளின் சிறப்பு சூழலுக்கு பாதுகாப்பு கொடுக்கும் அதே நேரத்தில் அப்பகுதி மக்களின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட ரீதியான பாதுகாப்பு மற்றும் பொருளாதார திட்டங்கள் மக்கள் பங்கேற்போடு உருவாக்கப்படவேண்டும்.
- புவி வெப்பமடைதலுக்கு காரணமாக இருக்கும் மற்றும் உள்ளூர் பகுதிகளின் காற்று, நீர் மற்றும் நிலத்தை மாசுபடுத்தும் புதிய நிலக்கறி அனல் மின் திட்டங்களை கைவிட்டு மாநிலத்தின் ஆற்றல் தேவைகளுக்கு பரவலாக்கப்பட்ட சிறிய அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை பின் தொடர வேண்டும்.
- உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை திட்டங்கள் தொடர்பாக பொது ஆலோசனை மற்றும் சுற்றுச்சூழல் முடிவெடுப்பதில் பங்கேற்பதை வலுப்படுத்த வேண்டும்
- நாங்கள், சூழலியல் நீதிக்கான அரசின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் நிலையிலும், சிவில் சமூகத்தின் உறுப்பினர்களாக, எங்கள் கண்காணிப்புப் பணிகளை தொடருவோம்” என தெரிவித்தனர்
இந்த கடிதத்தில் பாடகர் டி. கிருஷ்ணா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம், சுப.உதயகுமார், பேராசிரியர் ராமு மணிவண்ணன், பாமயன், நித்யானந்த் ஜெயராமன் உள்ளிட்ட 67 பேர் கையெழுத்திட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இந்த கடிதம் மற்றும் இது தொடர்பான செய்திகள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.