“மனுதர்மம் குறித்து திருமாவளவன் பேசியது சரியா? தவறா?” அரசியல் தர்பார்.. SPL
By Aruvi | Galatta | Oct 25, 2020, 02:40 pm
“மனுதர்மம் குறித்து திருமாவளவன் பேசியது சரியா? தவறா? என்று, தமிழகத்தில் ஒரு அரசியல் தர்பாரே நடந்துகொண்டே இருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, “ 'மனுதர்மம்' என்ற நூலில் பட்டியலின சமூகத்தினரை மிக தரக்குறைவாக மோசமாக குறிப்பிடப்பட்டுள்ளதாக” தெரிவித்திருந்தார். அதாவது, “இந்து பெண்கள் விபச்சாரிகள் என இந்து மத சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ளதாக” திருமாவளவன் மேற்கொள் காட்டி பேசியிருந்தார்.
இதனையடுத்து, “மனுதர்மம் குறித்து திருமாவளவன் பேசியது சரியா? தவறா? என்று, தமிழகத்தில் ஒரு பட்டிமன்றத்தையே தமிழக அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றன. இதனால், மனுதர்மம் நூலை அனைவரும் படித்து அதிர்ச்சியடைந்து வருகின்றனர். அதே நேரத்தில், மனுதர்மம் நூல் இந்து மத்தின் புனித நூலாக போற்றப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில், பாஜகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் திருமாவளவன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளித்த திருமாவளவன், “தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்மீது பாஜக அவதூறு பரப்புகிறது என்றும், எனது பேச்சை திரித்து, பொய்யைப் பரப்புகிறது ஒரு கும்பல்” என்றும், பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும், “பெண்களை மனுதர்மம் இழிவுபடுத்துவதாகவும், அதை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விசிக தலைவர் எம்.பி திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், மனுதர்மம் குறித்து திருமாவளவன் பேசியதற்குத் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் யார் யார் என்னென்ன கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள் என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.
மு.க ஸ்டாலின்
“மனுதர்மம் குறித்து பேசிய விவகாரத்தில் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறைக்கு கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். திருமாவளவன் கருத்தை திரித்துக் கூறியவர்கள் மீது வழக்குப் பதியாதது ஏன்?” என்றும், கேள்வி எழுப்பி உள்ளார்.
“திமுக கூட்டணிக்குள் களங்கம் விளைவிக்க இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என வாய் பிளந்து நிற்கும் மதவெறியர்களின் ஆசை நிச்சயம் நிறைவேறாது. பெண்களுக்கான உரிமைகளைப் போற்றி நிலைநாட்டுவதில், திமுக அரசு செய்த சாதனைகளைப் போல, எந்த அரசும் - இயக்கமும் செய்ததில்லை” என்றும், ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதற்குப் பதில் அளிக்கும் விதமாக..
அமைச்சர் ஜெயக்குமார்
“பெண்களைப் போற்றவேண்டுமே தவிர, தூற்றக்கூடாது, திருமாவளவன் கூறியது கண்டிக்கத்தக்கது. சமுதாயத்தில் பெண்களின் பங்கு காலங்காலமாக இருந்து வருகிறது. திருமாவளவன் புகாருக்கு முகாந்திரம் இருந்தால் காவல் துறை நடவடிக்கை எடுக்கும்” என்றும், அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்
“திருமாவளவன் பெண்களை மதிப்பவர். பண்பாடு நிறைந்தவர். அவர் மீது காழ்ப்புணர்ச்சியுடன், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றும், குற்றம்சாட்டினார்.
சசிகலா புஷ்பா, எம்.பி.
“பெண்களை இழிவாகப் பேசியதற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும். திமுகவில் இந்து கடவுளை வணங்குபவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அப்படியானால், திருமாவளவனின் இந்த பேச்சு அவர்களையும் இழிவு படுத்துவதாகவும்” என்று, சசிகலா புஷ்பா வலியுறுத்தி உள்ளார்.
ப.சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர், காங்கிரஸ்
“தந்தை பெரியார் பற்றிய கருத்தரங்கில் நண்பர் திருமாவளவன் ஆற்றிய உரை குற்றம் என்று காவல் துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. பேசிய பொருள் ஏற்புடையதா இல்லையா என்பது பற்றி இரண்டு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், அது எப்படி குற்றம் ஆகும்? பேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள் தோறும் நினைவு படுத்த வேண்டுமா? இது போன்ற கருத்துக்களைத் தந்தை பெரியார் பேசினார். இன்று அவர் பேசியிருந்தால் காவல் துறை என்ன செய்திருப்பார்கள்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
நடிகை குஷ்பு, பாஜக
“கட்சி மாறிச்செல்வதை விமர்சிக்கும் தலைவர், பெண்கள் குறித்து இழிவாகப் பேசுவதைக் கண்டிக்காதது ஏன்? பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டதாகச் சொல்லும் திமுக வாய்திறக்காதது ஏன்? பெண்களுக்கு எதிரான கருத்தைத் தெரிவித்ததற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை இழிவுபடுத்திப் பேசியது சரியா? திருமாவளவன் பேசியது மிகவும் தவறு” என்று, சுட்டிக்காட்டினார்.
“கூட்டணியில் உள்ள திருமாவளவன் பேசியது பற்றி திமுக - காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? திராவிட கொள்கைகளை அவரவர் வீட்டிலேயே கொண்டு சேர்க்காதவர்கள் மக்களிடம் எப்படி கொண்டு செல்வார்கள். மதத்தின் பெயரால் பெண்களை இழிவாகப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, பாஜக நிர்வாகி நடிகை குஷ்பு வலியுறுத்தி உள்ளார்.
சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
“திருமாவளவன் மீது தனிமனித தாக்குதல் தொடுப்பது கண்டனத்துக்குரியது. அவ்வாறு அவமதிப்பு செய்ய முற்படும் மத அடிப்படைவாதிகளின் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்ற பெரும்பாவலன் பாரதியின் முழக்கத்திற்கு ஏற்ப, மனிதர்களை மனிதர்களாய் பாராது வருணப்பேதத்தின் மூலம் பிரித்தாண்டு, ஒடுக்கித் தாழ்த்தி வீழ்த்தத் துடிக்கும், பெண்களை இழித்துரைக்கும் மனுஸ்மிருதியின் கொடியக் கோட்பாடுகளை எடுத்துரைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது தனிமனிதத்தாக்குதல் தொடுத்து அவமதிப்புச் செய்ய முற்படும் மத அடிப்படைவாதிகளின் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது” என்றும் சீமான் தெரிவித்து உள்ளார்.
இப்படியாக, தமிழக அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களைத் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இதனிடையே, சென்னையில் நேற்று மனு தர்ம நூலை எரித்து போராட்டம் நடத்திய திருமாவளவன் உள்பட 250 பேர் மீது, 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.