ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரித்தற்காக நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் அமேசான் நிறுவனம் ஆகியவற்றுக்கு வன்னியர் சங்கம் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யாவின் நடிப்பில், தீபாவளியை முன்னிட்டு, கடந்த நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது ஜெய்பீம்’திரைப்படம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட இந்த திரைப்படத்தில், மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர்.

த.செ.ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் திரைப்படத்தை, நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா ஆகியோரின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.  பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்கள் ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டி இருந்தனர். படத்தின் கரு பலராலும் பேசப்பட்ட அதே சமயம், படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும் சர்ச்சையாயின. இதையடுத்து நடிகர் சூர்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டங்கள் தெரிவிக்கப்பட்டது. சில காட்சிகளில் வன்னியர் சமுதாயம் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறதாக சர்ச்சைகள் எழுந்தது.

v1

இந்த திரைப்படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. அதேபோல், குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்தது.

விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து அக்னி கலசம் இடம்பெற்ற படத்தை மாற்றி விட்டு அதற்கு பதிலாக மகாலட்சுமி படம் இடம் பெறும் வகையில், காலண்டரை கிராபிக்ஸ் மூலம் மாற்றி விட்டனர்.

இதற்கிடையில், பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினருக்கு 9 கேள்விகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டார் . ஆனால் இந்த அறிக்கைக்கு பதில் அளித்த நடிகர் சூர்யா,படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என நம்புகிறேன் என்று பதிலடி கொடுத்தார்.

v2

இந்நிலையில், ஜெய் பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குநர் த.செ.ஞானவேல், 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அருள்மொழி தரப்பிலிருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

அந்த நோட்டீஸில், ‘தமிழகத்தில் அதிகப்படியான மக்கள் தொகையைக் கொண்டது வன்னியர் சமுதாயம். தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பரவலாக வன்னியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் குரு. ஆனால் வன்னியர் சமுதாயத்தை இந்த திரைப்படத்தில் தவறாக சித்தரித்து உள்ளனர்.

எனவே, வன்னியர்களின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தியதற்காக 24 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும். மேலும், படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும் . 7 நாட்களுக்குள் 5 கோடி ரூபாய் அபராதம் வழங்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.