கோயிலில் நுழைந்து சாமி தரிசனம் செய்ததற்காக பட்டியலின பிரிவை சேர்ந்த சிறுவன் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சாமி எல்லோருக்கும் பொதுவானது தானா என்ற ஒரு மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது?!

Uttar Pradesh boy shot dead in temple

உத்தரப்பிரதேசம் மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள தொம்கேரா கிராமத்தில் வசிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் என்ற விவசாயின் 17 வயது மகன் விகாஷ், அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் படித்து வந்தார். 

இதனிடையே, கடந்த 1 ஆம் தேதி தனது சொந்த கிராமத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு அந்த சிறுவன் சாமி கும்பிட சென்றுள்ளார்.

அப்போது, அங்கிருந்த மற்ற சமூகத்தினர், அவரை கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், சிறுவனின் சாதி பெயரைச் சொல்லித் திட்டியதாகவும் தெரிகிறது.

ஆனால், யார் பேச்சையும் கேட்காத அந்த சிறுவன், எதிர்ப்பையும் தாண்டி, சிவன் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்துள்ளார்.

Uttar Pradesh boy shot dead in temple

அப்போது, கோயிலுக்கு வெளியே காத்திருந்த பிற சமூகத்தினர், அந்த சிறுவனை கடுமையாகத் தாக்கியதோடு, மீண்டும் சாதி பெயரைச் சொல்லித் திட்டி விரட்டியடித்துள்ளனர்.

பின்னர், படுகாயங்களுடன் வீடு திரும்பிய மகனின் இந்த நிலையைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், இந்த புகார் குறித்து போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதி இரவு, பிற சமூகத்தைச் சேர்ந்த 4 பேர், வீடு புகுந்து வெளியே இழுத்துவந்து கடுமையாகத் தாக்கிவிட்ட, திடீரென்று துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில், சிறுவன் விகாஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த 4 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனை நேரில் பார்த்த விகாஷின் தந்தை, மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சம்மந்தப்பட்ட காவல்துறையினர், “அந்த பகுதி இளைஞர்கள் விளையாடும்போது, பிரச்சனை எழுந்ததாகவும், அதன் காரணமாக விகாஷ் சுடப்பட்டிருக்கலாம்” என்றும் இயல்பாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், “தலைமறைவாக உள்ள இளைஞர்களைக் கைது செய்ய தேடி வருவதாகவும்” அந்த போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கோயிலில் நுழைந்து சாமி தரிசனம் செய்ததற்காக, பட்டியலின பிரிவைச் சேர்ந்த சிறுவன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.