சினிமாவையே மிஞ்சும் வகையில், 25 கார்களில் வந்த 80 கொள்ளையர்கள், வெறும் 60 வினாடிகளில் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருக்கும் சான் பிரான்சிஸ்கோ நகரில் வால்நட் கிரீக் பகுதியில் Nordstrom நார்ட்ஸ்ட்ரோம் என்ற பல்பொருள் அங்காடி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த பல்பொருள் அங்காடி கடந்த 20 ஆம் தேதி சனிக் கிழமை இரவு நேரத்தில், கடைகள் மூடப்படுவதற்குச் சற்று முன்பாக, சுமார் 25 கார்களில் முகமூடி அணிந்த 80 மர்ம நபர்கள் காரில் இருந்து கண் இமைக்கும் நேரத்தில் கையில் பயங்கர ஆயுதங்களுடன் இறங்கி, நார்ட்ஸ்ட்ரோம் பல்பொருள் அங்காடிக்குள் அதிரடியாக நுழைந்து உள்ளனர்.
அந்த பல்பொருள் அங்காடியில் வெறும் 60 வினாடிகளில் அங்கு கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் வாரி சுருட்டிக்கொண்டு, அந்த பல்பொருள் அங்காடியை வெறும் 60 வினாடிகளில் சூரையாடிவிட்டு, அடுத்த நிமிடமே கண் இமைக்கும் நேரத்தில் அந்த கொள்ளையர்கள் தப்பிச் சென்று உள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்தின் போது, அந்த அங்காடியில் பணியாற்றிய 2 பேர் இதனை தடுக்க முயன்று உள்ளனர். ஆனால், அவர்கள் இருவரையும் அந்த கொள்ளையர்கள் சரமாரியாகத் தாக்கி உள்ளனர்.
அத்துடன், தடுக்க முயன்ற மற்றொருவரின் முகத்தில் மிளகு ஸ்பிரேவும் அடிக்கப்பட்டது. இப்படி, கொள்ளையர்களால் தாக்கப்பட்ட 3 பேர் காயமடைந்த நிலையில், கொள்ளையர்கள் சென்ற அடுத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்திலேயே அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும், கண் இமைக்கும் நேரத்தில் கொள்ளையர்கள் காரில் தப்பி சென்ற நிலையில், அங்கு விரைந்து வந்த போலீசார், கொள்ளையர்களில் 3 பேரை மடக்கிப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரில் ஒருவரிடம், ஒரு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக, இந்த கொள்ளை சம்பவத்தை நேரில் பார்த்த அந்நாட்டினர் தங்களது டிவிட்டர் பக்கத்தில் போட்டோவுடன் பகிர்ந்து டிவிட் செய்து உள்ளனர்.
அந்த டிவிட் பதிவில், முகமூடி அணிந்த நபர்கள் கைகளில் பை, பெட்டி போன்ற ஒன்றுடன் தப்பிச் செல்லும் காட்சியும், அதில் இடம் பெற்றிருக்கிறது.
மேலும், இந்த பயங்கர கொள்ளை சம்பவத்தைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த அங்குள்ள பக்கத்துக் கடைக்காரர்கள் அனைவரும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையா தங்களது கடைகளை உடனடியாக பூட்டிக்கொண்டு உஷாரானார்கள்.
இந்த கொள்ளை சம்பவம் நிகழ்வதற்கு ஒருநாள் முன்பாக சான்பிரான்சிஸ்கோவின் யூனியன் சதுக்கம் பகுதியில் உள்ள ஏராளமான கடைகளுக்குள் இதே போல் கும்பல் ஒன்று, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தற்போது தெரிய வந்திருக்கிறது.
உலக வல்லரசான அமெரிக்காவில் நடைபெற்ற இந்த மாபெரும் கொள்ளை சம்பவம், அந்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.