செப்டம்பர் முதல் ஊரடங்கில் தளர்வுகளா? நீட்டிக்கப்படும் கட்டுப்பாடுகள் என்னென்ன?
By Aruvi | Galatta | Aug 26, 2020, 07:20 pm
வரும் செப்டம்பர் முதல் ஊரடங்கில் தளர்வுகள் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அப்போது என்னென்ன கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என்பது குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளன.
உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனா என்னும் பெருந் தொற்று கடந்த மார்ச் மாதம் இறுதியில் இந்தியாவில் பரவத் தொடங்கியது முதல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து, குறிப்பிட்ட நாட்களின் இடைவெளியில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட
நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் நோய் தற்போது சற்று தணிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.
ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் குறைவதும், மீண்டும் அதிகரிப்பதுமாக மாறி மாறி காணப்படுகிறது. எனினும், தமிழக மக்கள் கொரோனா வைரஸ் நோயுடன் வாழ தங்களைப் பழக்கப்படுத்திக்கொண்டதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு படிப்படியாகப் பல தளர்வுகளை அனுமதித்து வருகிறது. ஆனாலும், தமிழகத்தில் தொடர்ந்து பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இபாஸ் நடைமுறையை நீக்க வேண்டும் என்று, மாநில அரசுகளை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகளும், இதே கருத்தை வலியுறுத்தி வருகின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க வரும் 29 ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, செப்டம்பர் மாதத்திலும் ஊரடங்கு நீடிக்குமா? அல்லது என்னென்ன தளர்வுகள் அமலுக்கு வரும்? என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தின் நிலை இப்படி இருக்கும் சூழ்நிலையில், செப்டம்பர் முதல் தேதி முதல் நாடு முழுவதும் புதிய தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், சில முக்கியமான கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் டெல்லி வட்டாரங்களில் பேசப்படுகின்றன.
அதன்படி, இந்தியா முழுவதும் மெட்ரோ ரயில் சேவையானது செப்டம்பர் முதல் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.அதே நேரத்தில் உள்ளூர் நிலவரத்திற்கு ஏற்றபடி இதில் மாற்றம் இருக்கும் என்றும், டிக்கெட் எடுப்பது முதல் ரயில் பயணம் வரை பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், தனியார் விடுதிகளில் அல்லது தனியாரால் நடத்தப்படும் பார்கள் திறக்க அனுமதி அளிக்கப்படலாம் என்றும், அதிலும் சில அதிரடியான விதிமுறைகள் பின்பற்றப்படலாம் என்றும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் இறுதி வரை திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்ற உறுதியாகக் கூறப்படும் அதே வேளையில், ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் பல கட்டுப்பாடுகளுடன் திறக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாநிலங்களில் கொரோனா வைரஸ் நோயின் பாதிப்பு தன்மைக்கு ஏற்றவாறு பொதுப் போக்குவரத்து தொடங்க அனுமதி அளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
முக்கியமாக, பல கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் தற்போது உள்ள கட்டுப்பாடுகள் முறையே தொடரும் என்றும் அதிகாரிகள் தரப்பில் பேசப்படுவதாகவும் தெரிகிறது.
ஊரடங்கு தளர்வு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தற்போது முழுவீச்சில் விரிவான ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர் என்றும், இது தொடர்பாக அடுத்த சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.