“என்னை யாரும் மூன்றாம் கலைஞர் என்று அழைக்க வேண்டாம்..” என்று, திமுக தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அன்பு கட்டளையிட்டுள்ளது, திமுகவினர் மத்தியில் வைரலாகி வருகிறது.
திமுக கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை அமைத்து, ஓராண்டு சாதனை கொண்டாட்டத்துடன், 2 வது ஆண்டில் அடியெடுத்து வைத்து, சிறப்பான முறையில் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.
அதே போல், கடந்த ஆட்சி காலத்தில், சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி நடித்து வந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தற்போது சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரானது முதல் சினிமாவில் நடிப்பதை சற்றே குறைத்துக்கொண்டு, கட்சி சார்ந்த பணிகளில் அதிகம் ஈடுபட்டு வருகிறார்.
இந்த சூழலில் தான், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சாலையில் உள்ள தடிகொண்ட அய்யனார் திடலில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்த நாள் விழா, திமுகவின் மறைந்த முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா, கட்சித் தொண்டர்களை போற்றும் வகையில் பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில், திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, திமுகவின் முன்னோடி தொண்டர்கள் 1051 பேருக்கு தல பத்தாயிரம் விதம், ஒரு கோடியே 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பொற்கிழி வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொண்டீர்களா?” என்று, கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி, “பேசுவதை விட செயல் படதான் எனக்கு பிடிக்கும். எந்த மாவட்டத்திற்கு எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், கட்சிக்காக உழைத்த தொண்டர்களுக்கு உதவி செய்யும் நிகழ்ச்சிக்கு அந்த அந்த மாவட்ட செயலாளர்களிடம் கூறி ஏற்பாடு செய்யச் சொல்லி அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வேன்” என்று, குறிப்பிட்டார்.
அத்துடன், “கடந்த 3 தேர்தல்களில் மிகப் பெரிய வெற்றியை மக்கள் கொடுத்துள்ளார்கள் என்றும், இதற்கு திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் தான் மிக முக்கிய காரணம்” என்றும், சுட்டிக்காட்டிய உதயநிதி, “நான் பெரியாரையோ அண்ணாவையோ நேரில் பார்த்ததில்லை என்றும், மாறாக கலைஞர் கருணாநிதியை பார்த்து வளர்ந்து உள்ளேன்” என்றும், சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தற்பொழுது திமுகவின் தொண்டர்களை பெரியார், அண்ணா, கலைஞர் இவர்களின் மறு உருவமாக பார்க்கிறேன்” என்றும், கட்சித் தொண்டர்களை இன்னும் உற்சாகப்படுத்தினார்.
மேலும், “என் மீது கொண்ட அன்பால், திமுகவினர் என்னை மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்றெல்லாம் அழைக்கின்றனர்” என்று சுட்டிக்காட்டிய உதயநிதி, “அவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள் என்னவென்றால், இது வேண்டுகோள் மட்டுமல்ல உரிமையாகவே நமது கட்சித் தொண்டர்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், “என்னை மூன்றாவது கலைஞர், இளம் தலைவர் என்று அழைப்பதில் எனக்கு துளி கூட உடன்பாடு இல்லை” என்று, வெளிப்படையாகவே பேசினார்.
குறிப்பாக, “கலைஞர் என்றால், அது கலைஞர் மட்டும் தான். அதனால், என்னை அப்படி அழைக்க வேண்டாம். சிலர் சின்னவர் என்று அழைக்கிறார்கள். அப்படி அழைப்பது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால், என்னை விட அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் பலர் உள்ளதால், நான் சின்னவர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.
அதே போல், “எனக்கு ராசியில் நம்பிக்கை இல்லை என்றும், உழைப்பிலும், உங்களது அன்பிலும் தான் எனக்கு நம்பிக்கை உள்ளது” என்றும், அவர் பேசினார். அப்போது, கட்சித் தொண்டர்கள் உற்சாக மிகுதியில் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
முக்கியமாக, “மாவட்டம் தோறும் திராவிட மாடல் பயிற்சி பட்டறை நடத்தி வருகிறோம் என்றும், இதை ஒரு தினசரி நாளிதழில் விமர்சனம் செய்துள்ளது என்றும், அதை என்னிடம் சிலர் கூறினார்கள் அதற்கு நான் அந்த நாளிதழில் விமர்சனம் செய்தால் சரியான பாதையில் தான் சென்று கொண்டுள்ளோம் என்று சொன்னேன்” என்றும், உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த உரை, தற்போது திமுகவினர் மத்தியில் வைரலாகி வருகிறது.