தமிழகத்தின் மத்திய அரசு நிறுவனங்களில் 200 வட மாநிலத்தவர்கள் போலி சான்றிதழ்கள் மூலம் வேலை!
“தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் பணிக்கு சேருவதற்காக, போலியான மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்த 200 க்கும் அதிகமான வட மாநிலத்தவர், வேலையில் சேர்ந்துள்ளதாக” அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக வேலை வாய்ப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வரும் வட மாநிலத்தவரின் எண்ணிக்கையானது, பல லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இதில், தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு நிறுவனங்களில் சட்டப்படியே பல ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.
இது மட்டுமில்லாமல், சென்னை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் அதிகரிக்கத் தொடங்கிய வட மாநிலத்தவர் ஆதிக்கம் தற்போது தமிழ்நாட்டின் 2 ஆம் நிலை நகரங்களிலும் கட்டுக்கடங்காமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில் தான், தமிழகத்தில் படித்து பட்டம் வாங்கிய சக தமிழ்நாட்டு இளைஞர், தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனத்திலோ, ரயில்வே மற்றும் என்.எல்.சி. போன்ற நிறுவனங்களிலோ வேலையில் சேர முடிவதில்லை. ஆனால், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் வட மாநிலத்தவருக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் எழுந்து உள்ளன.
அதாவது, டெல்லி, உத்திரப் பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலத்தவர்கள் அதிக அளவில் மத்திய அரசு வேலை வாய்ப்பில் இடம் பிடித்து உள்ளார்கள்.
அதே போல், தமிழக அஞ்சலக துறையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடத்திய தேர்வில் வட இந்தியர்கள் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதினார்கள். இவர்கள் தமிழ் பாடத்தில் 25 க்கு 24 மதிப்பெண் பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதழனயடுத்து, அவர்களது தேர்ச்சி நிராகரிக்கப்பட்டது.
வட மாநிலத்தவர் மோசடி செய்து, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் சேருவதாக பல ஆண்டுகளாக புகார்கள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் தான், தற்போது தமிழக மத்திய அரசு நிறுவனங்களில் 20 க்கும் மேற்பட வட மாநிலத்தவர் போலி ஆவணங்கள் மூலம் வேலையில் சேர்ந்து உள்ளது தெரிய வந்தது.
அத்துடன், தமிழக தேர்வுத் துறை வழங்கியது போல், போலி ஆவணம் கொடுத்து மத்திய அரசு பணிகளில் பல்வேறு துறைகளில் வட மாநிலத்தவர்கள் சேர்ந்து உள்ளனர் என்றும், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் சுமார் 200 பேர் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்து உள்ளனர்” என்றும், தற்போது தெரிய வந்துள்ளது.
அதன் படி, “தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் நிறுவனங்களான அஞ்சலக துறை, சிஆர்பிஎப், இந்தியன் ஆயில் போன்ற நிறுவனக்களில் இவ்வாறான முறைகேடுகள் நடந்து உள்ளது” தற்போது தெரிய வந்திருக்கிறது.
குறிப்பாக, “யுபிஎஸ்சி கொடுத்த சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கையில் போலி சான்றிதழ்கள் என அரசு தேர்வுகள் துறை உறுதி” செய்து உள்ளது.
அதே போல், “போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தவர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்க அரசு தேர்வுகள் துறை அஞ்சலக துறைக்கு தற்போது பரிந்துரை செய்து உள்ளதாகவும்” தகவல்கள் வெளியாகி உள்ளன.
“போலி சான்றிதழ் தந்த நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க, அரசுத் தேர்வுகள் இயக்ககம் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்து உள்ளது” குறிப்பிடத்தக்கது.