பாகுபலியான அமெரிக்க அதிபர்! மார்பிங் செய்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த டிரம்ப்!
By Aruvi | Galatta | 02:14 PM
பாகுபலிக்கு பதிலாக ட்ரம்பின் முகத்தை மார்பிங் செய்து வெளியான வீடியோவை, அமெரிக்க அதிபர் டிரம்ப்பே தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அரசு முறை பயணமாக நாளை இந்தியா வருகிறார். அவருடன், அவருடைய மனைவி மெலனியா டிரம்பும் உடன் வருகிறார்.
இந்தியாவில், பிரதமர் மோடியுடன் இணைந்து, பொதுக் கூட்டத்தில் டிரம்ப் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். இந்த உரையைக் கேட்பதற்கு, உலகமே காத்துக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், இந்தியா வரும் டிரம்பை வரவேற்கும் விதமாக, இந்தியக் கலைஞர்கள் பலரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதன்படி, கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர், பருத்தி துணியால் ஆன குர்தாவை ட்ரம்புக்கு பரிசாக வழங்க அனுப்பி உள்ளார். அவரைப் போலவே, அகமதாபாத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், மோடி - ட்ரம்ப் உருவங்களை அரிசியில் தத்ரூபமாக வடிவமைத்து, பரிசுப் பொருளாக அனுப்பி வைத்துள்ளார்.
மேலும், நம்மூர் இணையக் குறும்புக்கார இளைஞர்கள், டிரம்பின் முகத்தை “பாகுபலி” படத்தில் வரும் நாயகன் முகத்திற்குப் பதிலாக மார்பிங் செய்து அசத்தி உள்ளனர்.
அதன்படி, அமெரிக்க அதிபர் டிரம்ப் முகத்தை.. “போரில் வாளேந்தி சண்டையிடும் காட்சிகள் கொண்ட மார்பிங் செய்யப்பட்ட “பாகுபலி” பட வீடியோ இணையத்தில் வெளியானது.
அதில், டிரம்ப் கையில் வாளேந்தி போரிடுவதுபோல் மார்பிங் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், படத்தில் வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் முகத்திற்குப் பதிலாக, ட்ரம்பின் மனைவி மெலனியாவின் முகத்தை மார்பிங் செய்து, குறும்புக்கார இளைஞர்கள் அசத்தி உள்ளனர்.
To celebrate Trump's visit to India I wanted to make a video to show how in my warped mind it will go......
— Sol 🎬 (@Solmemes1) February 22, 2020
USA and India united! pic.twitter.com/uuPWNRZjk4
இதனை ரசித்த அதிபர் டிரம்ப், இந்த வீடியோவை தனது டிவிட்டரில் பகிர்ந்து, அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். மேலும், இந்த வீடியோவுடன், என்னுடைய இந்திய நண்பர்களைக் காண எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்” என்றும் அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டிவிட்டரில் பதிவிட்ட “பாகுபலி“ பட வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.