ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
By Nivetha | Galatta | Oct 22, 2020, 05:21 pm
கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் மாதத்திலிருந்து, இந்தியாவின் சுற்றுலா தளங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. இப்போதும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை என்றாலும், மருத்துவ அவசரத்தை விட பொருளாதார இழப்பு பெரிதாகியிருக்கிறது.
ஆகையால் மத்திய-மாநில அரசுகள் கடந்த சில வாரங்களாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, இந்தியாவின் மிகமுக்கியமான சுற்றுலா தளமான தாஜ்மகால் திறக்கும் தேதி கடந்த மாதத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி செப்டம்ர் 21-ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்காக தாஜ்மகால் மற்றும் ஆக்ரா கோட்டை திறக்கப்பட்டது. இருப்பினும், அதற்கு நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு படிப்படியாக தளரவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஏழு மாதத்துக்குப் பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒகேனக்கல் அருவியில் இன்று முதல் குளிக்கவும் மசாஜ் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் சின்னாறு முதல் கோத்திகள் வரை பரிசல்களை இயக்க மாவட்ட ஆட்சியர் மலர்விழி அனுமதி அளித்துள்ளார்.
ஒகேனக்கலை போலவே கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க கோரி, சுற்றுலா தொழிலையே நம்பி இருக்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து, அனுமதியும் அளிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு தளர்வை தொடர்ந்து ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் பலரும் முக கவசம் அணியாமல் திரிவதாக புகார்களும் வந்தன. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.
கொடைக்கானலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வேன், மற்றும் வாடகை கார்களை வைத்திருக்கும் ஓட்டுனர்கள் , சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா தளங்களில் சிறிய கடை வைத்திருப்பவர்கள் ,குடிசை தொழிலாக ஹோம் மேடு சாக்லேட் செய்பவர்கள் என சுற்றுலா பயணிகளையே நம்பி 1000த்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த 5 மாதமாக கொரோனா ஊரடங்கு காரணமாக கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டதால் இந்த மக்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாக இருந்துவந்தது. தற்போதுதான் அவர்களின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்கு வருகின்றது.
குறிப்பாக சுற்றுலா பயணிகள் இல்லாததால் வாடகை கார்கள் இயக்காமல், வாகனங்களில் உள்ள பேட்டரி பழுதாகி விட்டதாக வாடகை கார் ஓட்டுநர்களின் நிலை, ஹோம்மேடு சாக்கலேட் விற்பனையாளர்களின் நிலை, சுற்றுலா பயணிகளின் வழிகாட்டிகள் என பலரின் வாழ்வும் இயல்புக்கு வருகின்றது. இதேபோல, ஒகேனக்கலிலும் அங்கு வாழும் மக்களின் நிலை இயல்புக்கு திரும்பும் என எதிர்ப்பார்க்கலாம்!