“பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” பள்ளிக் கல்வித்துறை திடீர் உத்தரவு!
“பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அருகாமையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய தொடர்பு எண்களை பள்ளி வளாகத்தில் வெளியிடுதல் போன்ற பணிகளைத் துரிதமாகச் செயல்படுத்த வேண்டும்” என்று, அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2 வது அலைக்குப் பிறகு, கடந்த 1 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு உள்ளன.
அத்துடன், வாரம் 6 நாட்களும் பள்ளி நாட்கள் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளதால், சனிக் கிழமை நாட்களிலும் பள்ளிகளைத் திறக்கப்படுகின்றன.
எனினும், கொரோனா தொற்றுக்கு முன்பாக தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு, அந்தந்த பள்ளி ஆசிரியர்களாலேயே பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இப்படியான சூழலில் தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பள்ளி மாணவிகள் சக ஆசிரியர் பெருமக்களாலேயே பாலியல் தொல்லைக்கு ஆளாவது தொடர்பாக, புதிய அரசு பொறுப்பேற்றது முதல் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால், “தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று, பள்ளிக் கல்வித்துறை அதிரடியான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து உள்ளது.
இது குறித்து, பள்ளிகளின் முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குப் பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிட்டு உள்ள புதிய உத்தரவில், “பாலியல் சீண்டல்களில் இருந்து மாணவிகளைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, உத்தரவிடப்பட்டு உள்ளது.
“ பள்ளிகளில் மாணவிகளுக்கு நடைபெறும் பாலியல் சீண்டல்களில் இருந்து மாணவியரைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
அத்துடன், “பள்ளிகளில் புகார் பெட்டி அமைத்தல், அருகாமையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய தொடர்பு எண்கள் மாணவிகளுக்குத் தெரியும் படி, பள்ளி வளாகத்தில் வெளியிட வேண்டும்” ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், “மாணவியரின் பாதுகாப்புக்குக் காவல் கண்காணிப்பாளர் நிலையிலான பெண் அதிகாரி, சமூகப் பாதுகாப்பு அலுவலர், சட்ட அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், உளவியல் வல்லுநர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்” என்றும், அதிரடியாக உத்தரவிடப்பட்டு உள்ளது.
“மேற்கண்ட உத்தரவுகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப் படுவதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடனுக்குடன் உறுதி செய்ய வேண்டும்” என்று, பள்ளிக் கல்வித் துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.