தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் மறைந்த கலைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு நிதியுதவி!
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் மறைந்த கலைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித் தொகைக்கான காசோலைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு, இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் மறைந்த கலைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்ப பராமரிப்பு தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் மறைந்த கலைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்பப் பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 15 வாரிசுதாரர்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் செல்வி, ஆ.கோமதி, ஈ. நாகம்மாள், க.ராமலட்சுமி, மு.அழகரக்காள், எஸ். ஸ்ரீகலா, ஆர். கங்காதேவி, ஆர். முத்துலட்சுமி, சா. அந்தோணியம்மாள், ச.மலர்வள்ளி, பா. ஜோதி, ஆர். மாரியம்மாள், ஆர். சரஸ்வதி, எம். தனம், எம். சங்கீதா ஆகிய 15 வாரிசுதாரர்களுக்கு ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தர மோகன், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், இயக்குனர் எஸ்.ஆர். காந்தி, உறுப்பினர் செயலர் மு. ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பழனி, தண்டாயுதபாணிசாமி கோவிலில் பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு 23 கோடியே 81 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், அன்னதாகக் கூடம், மின்தூக்கி மற்றும் நாதமணி மண்டபம் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். கம்பிவட ஊர்தி மேல்நிலையத்திலிருந்து மலைக்கோவில் வெளிப்பிரகாரத்திற்கு சிரமமின்றி சென்றுவர ஏதுவாக 13 நபர்கள் செல்லும் வகையில் 23 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மின்தூக்கி உபயதாரர் மூலம் அமைக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 58 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 108 இருக்கைகளுடன் கூடிய புதிய அன்னதானக் கூடம் அமைக்கப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தர மோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சர் சக்கரபாணி, ப. வேலுசாமி எம்.பி., செந்தில்குமார் எம்.எல்.ஏ., திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ச. விசாகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.