ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய - தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் சங்கம் கோரிக்கை.
By Madhalai Aron | Galatta | Sep 23, 2020, 02:53 pm
`ஆசையை தூண்டி விட்டு தற்கொலைக்கு தூண்டும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய அவசர சட்டம் இயற்றுக' - தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதுபற்றி அச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
``இணையதள சூதாட்டமான ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்டவற்றின் மீது மோகம் கொண்டு மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் முதல் தனியார் மற்றும் அரசு அதிகாரிகள் வரை அடிமையாகி பணத்தை இழந்து, அதன் காரணமாக கடன்கார்களாகி மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர்கதையாகி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.
ஏற்கனவே கடலூரைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் தாயுடனும், சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர், செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர், காவல்துறையினர் உள்ளிட்ட எண்ணற்றவர்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி, அதனால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் தர்மபுரியில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்த வெங்கடேஷ் என்பவர் நேற்று தற்கொலை செய்து கொண்டிருப்பது கடும் அதிர்ச்சியை தருகிறது.
கொரோனா பேரிடரால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த ஆறுமாத காலமாக மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை தொலைத்து வருமானமின்றி தவித்து வரும் சூழ்நிலையில் தொலைக்காட்சி, இணையதளங்களில் விளம்பரம் செய்து கொண்டிருந்த சூழலில் தற்போது தொலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்பி அதன் மூலம் மக்களின் மனதில் ஆசையை தூண்டி விட்டு பணம் பறிக்கும் செயலை ஆன்லைன் சூதாட்டத்தை வடிவமைத்துள்ள நிறுவனங்கள் செய்து வருகின்றன.
ஏற்கனவே "ப்ளுவேல்" எனும் இணையதள விளையாட்டினால் எண்ணற்ற பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், இளம் சிறார்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் நிலைமை எல்லை மீறி போவதை உணர்ந்த சென்னை உயர்நீதிமன்றம் அந்த இணையதள விளையாட்டிற்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி ஆன்லைன் சூதாட்டங்களால் மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் வழி தவறி செல்வதோடு, வாழ்க்கை முற்றிலுமாக பாழ்பட்டு அவர்களின் குடும்பம் சீரழிந்து போவதால் கடந்த சில வாரங்களுக்கு முன் "ரம்மி", "போக்கர்" உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஆந்திர அரசு தடை விதித்துள்ளதுடன் ஆந்திராவில் மீறி செயல்படும் அந்நிறுவனங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என தண்டனை விபரங்களையும் அறிவித்துள்ளது.
எனவே தமிழகத்தில் தொடரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுத்து நிறுத்தவும், மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் மத்தியில் ஆசையை தூண்டி விட்டு அவர்களை ஏமாற்றும் பணியை செய்து வரும் "ரம்மி", "போக்கர்" உள்ளிட்ட அதுபோன்ற இணையதள நிறுவனங்களுக்கு தமிழகத்தில் நிரந்தரமாக தடை விதிக்கவும், மீறி செயல்படும் நிறுவனங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கவும், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் வெளிடுவதை தடை செய்கின்ற வகையிலும் அவசர சட்டம் இயற்றிடுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
மேலும் கிரிக்கெட் வீரர் விராட்கோலி, திரைப்பட நடிகை தமன்னா உள்ளிட்டோர் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, சமூக அக்கறை சிறிதளவு கூட இல்லாமல் மக்கள் மனதில் குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மனதில் ஆசையை தூண்டும் வகையிலான ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளம்பரத்தில் நடித்து அதனை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பிரபலங்கள் எந்த ஒரு விளம்பரங்களிலும் நடிக்கும் போதும் அவர்கள் மீது அன்பு கொண்ட ரசிகர்கள் அதனை அப்படியே பின் தொடர நினைப்பார்கள் என்பதால் தாங்கள் நடிக்கும் விளம்பரங்கள் தேசத்திலும், நாம் வாழ்கின்ற இச்சமுதாயத்திலும் எதிர்மறையான நிகழ்வுகளை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு சமூக அக்கறையோடு செயல்பட வேண்டியதும், பேராசை பெரும் நஷ்டம் என்பதை பொதுமக்களும் கவனத்தில் கொண்டு செயல்படுவது அவசியமாகும்"
என சொல்லப்பட்டுள்ளது.