மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு, நவம்பர் 18 தொடங்கும்! - சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு
By Nivetha | Galatta | Nov 16, 2020, 04:58 pm
மருத்துவ இளைநிலை படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு, அனுமதி கிடைத்த பிறகு மருத்துவக் கலந்தாய்வுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. இதற்காக, கடந்த நவம்பர் 3 முதல் 12-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில், மருத்துவக் கலந்தாய்வுக்கான தர வரிசைப்பட்டியலை இன்று காலை 10 மணிக்கு, சென்னை மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
தமிழகத்தில் மொத்தம் 5,550 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதம் உள்ள 4,043 இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு உள்ளன. தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3,650 எம்.பி.பி.எஸ். இடங்களில், 227 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.
அதேபோன்று 14 தனியார் கல்லூரிகளில் உள்ள 1,949 எம்.பி.பி.எஸ் இடங்களில், 77 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. அத்துடன், இரு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 180 இடங்களில், 11 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,760 இடங்களில், 91 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஒதுக்கப்படுகின்றன. 7.5 சதவீத உள்ஒதுக்கீடு காரணமாக இந்த ஆண்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 395 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.
கொரோனா காரணமாக வழக்கமாக மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு பதில், இந்த ஆண்டு, வேறு இடத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முறைகேடு ஏதும் ஏற்படாதவாறு மாணவர்களின் கை ரேகை, விழித்திரை பதிவுடன் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆதாரங்கள் பெறப்படுகின்றன. மேலும், வருகின்ற டிசம்பர் 15-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, மாநில அளவில் மற்றும் அரசுப் பள்ளியில் படித்து 7.5% ஒதுக்கீட்டு இடங்களில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளின் பெயர்களை அமைச்சர் வெளியிட்டார்.
தர வரிசைப்பட்டி வெளியிட்ட பின்னர், மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 18-ம் தேதி புதன்கிழமை தொடங்கும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கலந்தாய்வின்போது, கொரோனா தொற்று அச்சம் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். நவம்பர் 18-ம் தேதி சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் எனறும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன்மூலம் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் படிக்க 405 அரசு பள்ளி மாணவா்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் நாளில் சிறப்பு பிரிவினருக்கும், அடுத்த நாள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மூன்றாவது நாளில் இருந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.