பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து! ஓட்டுநர் உயிரிழப்பு..
பள்ளி மாணவர்களுடன் சென்று கொண்டிருந்த பள்ளி வாகனம் வீட்டு சுவற்றின் மீது மோதியதில் பள்ளி வாகனம் கவிழ்ந்து, விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டை பகுதியில் ஒரு தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பகுதியில் பிரபலமான பள்ளியாக செயல்பட்டு வரும் அந்த தனியார் பள்ளியில், அந்த பகுதியைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அத்துடன், இந்த தனியார் பள்ளிக்கு கடலூரை சுற்றி உள்ள நெல்லிக்குப்பம், பண்ருட்டி, ரெட்டிச்சாவடி, திருவந்திபுரம், கடலூர் முதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இப்படியாக, இந்த பகுதியில் பயிலும் பள்ளி மாணவர்களை ஏற்றி வருவதற்கு அந்தப் பள்ளியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இன்று பள்ளியிலிருந்து நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள மாணவர்களை ஏற்றிச் செல்ல சென்ற பள்ளி வாகனத்தில், சுமார் 12 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பள்ளி நோக்கி சென்று உள்ளனர்.
அப்போது, அந்த பள்ளி வாகனமானது, நெல்லிக்குப்பம் ராமு நாயினார் வீதியில் சென்று கொண்டிருந்த போது, அந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பிரபு என்பவருக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. இதனால், அந்த வாகனத்தின் ஓட்டுநர் வண்டியின் ஸ்டேரிங்கில் சாய்ந்தவாறு இயக்கி உள்ளார்.
இதன் காரணமாக, அந்த பள்ளி வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அங்குள்ள சாலையின் இரு புறமும் இருந்த வீடுகளின் படிக்கட்டுகளில் ஏறி, அப்படியே கவிழ்ந்து உள்ளது.
இந்த விபத்தில், அந்த வாகனத்தில் பயணித்த 12 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், அவர்களுக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், பள்ளி வாகனத்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பிரபுக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த பிரபுவின் உடலை மீட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, “ஓட்டுநர் பிரபுக்கு ஏற்பட்டது சாதாரன நெஞ்சுவலி இல்லை என்றும், மாறாக மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார்” என்றும், தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போல், சென்னையில் இன்றைய தினம் பேருந்து விபத்து ஏற்பட்டு உள்ளது.
சென்னை பூந்தமல்லியில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த பேருந்து, சென்னை காமராஜர் சாலை போர் சின்னம் அருகே விபத்தில் சிக்கி உள்ளது. அப்போது, இந்த பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால், நல்வாய்ப்பாக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.