மத்திய அரசு அமைத்த கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவினர் 2019ஆம் ஆண்டு ஜூன் 1ம் தேதி புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டனர். புதிய கல்விக் கொள்கை வரைவில் இடம்பெற்ற மும்மொழிக் கல்வி, குருகுல கல்வி முறை, NTA எனப்படும் நுழைத்தேர்விற்கான அமைப்பு, 3 வயது முதலே கல்வியை தொடங்குதல், சமஸ்கிருத மொழிக்கு முக்கியத்துவம் உள்ளிட்ட அம்சங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.
 
தமிழகத்தில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும், கல்வியாளர்களும் புதிய கல்விக் கொள்கைக்கு மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். கல்வியாளர்கள் வைத்த சில கோரிக்கைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு மத்திய அரசு சில திருத்தங்களை செய்தது. இருப்பினும் புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
 
எதிர்ப்புகள் பல இருந்தபோதிலும், புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிய கல்வி வரைவு கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தேசிய கல்விக் கொள்கை என்பது கடந்த 1968-ம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. அதன்பின் 1976-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 42-வது திருத்தத்தின்படி கல்வி பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

அதன்பின் கடந்த 1986-ம் ஆண்டு கல்விக் கொள்கை திருத்தப்பட்டது. அடுத்தாற்போல் 1992-ம் ஆண்டு கல்விக் கொள்கை திருத்தப்பட்டாலும் பெருமளவு மாற்றம் செய்யப்படவில்லை. அதன்பின் கடந்த 2016-ம் ஆண்டு மே 27-ம் தேதி டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் குழு கல்விக் கொள்கையில் சில திருத்தங்கள் செய்து தாக்கல் செய்தது. அதன் 2019-ம் ஆண்டு கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்தது. இதற்கு ஒப்புதல் அளித்து மத்திய அமைச்சரவை உத்தரவிட்டது.

ஒப்புதலுக்கு பிறகு, இம்மாத தொடக்கத்தில், பிரதமர் மோடி இதுபற்றி காணொலி வாயிலாக மக்களிடம் உரையாற்ற்னார். அப்போது, ``இந்தியாவில் 34 ஆண்டுகால பழமையான கல்வி முறையை மாற்றியமைக்கும் தேசிய கல்வி கொள்கை எந்த ஒரு பகுதியிலும் சார்பு குறித்த கவலைகளை எழுப்பவில்லை, என்பது "மனதைக் கவரும்" விஷயமாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

தமிழகத்தை பொறுத்தவரை, எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, ஆளுங்கட்சியான மாநில அரசும் சில விஷயங்களில் முரண்பட்டுதான் இருக்கிறது. அதன் வெளிப்பாடகவே தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்த முதல்வர், புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்படும் என்றும் அந்த குழுவின் ஆலோசனை படியே புதிய கல்விக் கொள்கை குறித்து அரசு பரிசீலிக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை பற்றி ஆராய தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு ஐந்து நாள்களுக்கு முன் அரசாணை வெளியிட்டுள்ளது.
 
அந்தக் குழுவில் சென்னை பல்கலை. முன்னாள் துணை வேந்தர்கள் தியாகராஜன், துரைசாமி ஆகியோரும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணை வேந்தர் பிச்சுமணி, அழகப்பா துணைவேந்தர் ராஜேந்திரன், திருவள்ளூர் துணைவேந்தர் தாமரைச்செல்வி, காமராஜர் பல்கலை. கிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர் என சொல்லப்பட்டது.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையில் பள்ளிக்கல்வி குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை அமைத்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழு பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில் செயல்பட உள்ளது.

இக்குழுவில் உள்ள உறுப்பினர்கள்:
1.பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் ஐஏஎஸ்
2.பூஜா குல்கர்னி ஐஏஎஸ்,
3.லதா ஐஏஎஸ், சமக்ர சிக்‌ஷா மாநிலத் திட்டக்குழு இயக்குநர்
4.கவிதா ராமு ஐஏஎஸ்
5.முனியநாதன் ஐஏஎஸ்
6.அகிலா ராதாகிருஷ்ணன்
7.என்.பஞ்சநாதன்
8.ஜோதிமுருகன்
9.பாலசுப்ரமணியம்
10.மரியஜீனா ஜான்சன்
11.ஆர்.இளங்கோவன்
12.சுந்தரபரிபூரணம் பட்சிராஜன்
13.கே.வி.ஜெயஸ்ரீ

என்று சொல்லப்படுகிறது.