“பேய்களுக்காக மாந்திரீக பூஜை” கல்லூரி மாணவி மரணத்தில் என்ன நடந்தது?
இரவு நேர பூஜையின் போது கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்து கோட்டை கிராமத்தில், உள்ள கோயிலில் வைத்து, அந்த பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவர் அங்கு அருள் வாக்கு கூறி வருகிறார். இவரிடம், பலரும் அருள் வாக்கு கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தான், தாமரைபாக்கத்தை அடுத்து உள்ள கொமக்கமேடு கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் 20 வயதான ஹேமமாலினி என்ற இளம் பெண், அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த இளம் பெண், கடந்த “18 மாதங்களாக பேய் பிசாசு ஆவியால் பாதிக்கப்பட்டு, இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது” என்று கூறி, இவரது உறவினர்களால் அந்த கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்.
அப்போது, அந்த கோயில் இருந்த பூசாரி முனுசாமி, தனது வீட்டில் அவரது மனைவியுடன் சேர்ந்து பூஜை செய்து வந்தார்.
இந்த நிலையில் தான், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இளம் பெண் ஹேமாமாலினி, தனது பெரியம்மா இந்திராணி மற்றும் தங்கையுடன் கோயிலுக்குச் சென்று பூஜை செய்து உள்ளார்.
அப்போது, இரவு நேர பூஜை முடிந்து நள்ளிரவு பூசாரி முனுசாமியின் மனைவியுடன் தூங்கச் செல்வதற்கு முன்பு, ஹேமமாலினிக்கு தேங்காய் பூசணிக்காய் எலுமிச்சம்பழம் சுற்றி திருஷ்டி கழித்து உள்ளனர்.
அதன் பிறகு, பின்னர், பூசாரி முனுசாமியின் அறையில் ஹேமாமாலினி மற்றும் அவரது தங்கை படுத்து தூங்கி உள்ளனர்.
இவர்களுடன் வந்த பெரியம்மா இந்திராணி அங்குள்ள அம்மன் கோயில் மண்டபத்தில் கோயிலுக்கு வந்திருந்தவர்களுடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, அதிகாலை நேரத்தில் ஹேமமாலினி திடீரென விஷம் குடித்து வாந்தி எடுத்து மயங்கி பேச்சு மூச்சின்றி உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்டார் என்று கூறப்படுகிறது. இதனால், அங்கு பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.
இது குறித்து கோயில் பூசாரி முனுசாமியின் தரப்பில், அவரது மனைவி மட்டும் எழுந்து வந்து அந்த மண்டபத்தில் உறங்கிக்கொண்டிருந்த ஹேமமாலினியின் பெரியம்மா இந்திராணியை எழுப்பி இந்த விசயத்தை கூறியிருக்கிறார்.
அதன் பிறகு, அடுத்த 2 மணி நேரம் சென்ற பிறகு 108 ஆம்புலன்ஸுக்கு கூட தகவல் தெரிவிக்காமல், ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அவர்கள் சென்று உள்ளானர்.
அத்துடன், உயிருக்கு போராடிய அந்த இளம் பெண்ணை, உயிருக்கு ஆபத்தான நிலையில் சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வெங்கல் கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிக்கு அவர்கள் அழைத்துச் சென்று உள்ளனர்.
அதன் பிறகு, அங்கிருந்து அடுத்த 2 மணி நேரம் சென்ற பிறகே திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அங்கு, அந்த பெண்ணை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்த நிலையில், தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த அந்த இளம் பெண் ஹேமாமாலினி, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், இந்த சம்பவம் பற்றி மருத்துவமனை தரப்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து விரைந்து வந்த பென்னலூர்பேட்டை போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் தான், கோயில் பூசாரி முனுசாமி தலைமறைவானார்.
அதன் படி, “உடல் நலக்குறைவால் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தனியார் கல்லூரி மாணவிக்கு உண்மையில் என்ன நடந்தது? எதனால் அந்த பெண் விஷம் குடித்தார்?” என்று, கோயில் பூசாரி முனுசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று, போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
குறிப்பாக, “18 மாதங்களாக சிகிச்சை என்ற பெயரில் தனியார் கல்லூரி மாணவி ஹேமாமாலினி போன்று பலர் அங்கு சிகிச்சை பெற்றது எப்படி?” என்றும், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.