திருநெல்வேலி அருகே காதல் திருமணத்தால் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட 5 கொடூர கொலைகளால், அந்த கிராமத்தில் பதற்றம் பற்றி எரியும் நிலையில், பதற்றத்தைத் தணிக்கத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாங்குநேரி அருகே உள்ள மறுகால் குறிச்சி பகுதியைச் சேர்ந்த நம்பிராஜன் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த வான்மதி என்ற இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இதனால், நம்பிராஜன் மீது வான்மதியின் குடும்பத்தினர் கடும் ஆத்திரத்தில் இருந்தனர். அதன்படி, மாப்பிள்ளை நம்பிராஜனை தனியாக அழைத்துச் சென்ற வான்மதியின் குடும்பத்தினர், அவரை கடந்த 2019 ஆம் ஆண்டு கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், வான்மதியின் சகோதரர் செல்லப்பாண்டி, அவரது உறவினர்கள் 5 பேரை கைது செய்தனர். 

இதனையடுத்து, நம்பிராஜனை கொலை செய்ததால், கடும் ஆத்திரத்தில் இருந்த அவரது தாயாரும், உறவினர்களும், நம்பிராஜன் கொலைக்குப் பழிக்குப் பழிவாங்கத் தக்க நேரம் பார்த்து, காத்துக்கொண்டு இருந்தனர். அதன்படி, ஜாமீனில் வெளியே வந்த கொலையில் தொடர்புடைய ஆறுமுகம், சுரேஷ் ஆகிய இருவரை நம்பிராஜன் தரப்பினர் வெட்டிக்கொன்று பழி தீர்த்தனர். 

இது குறித்தும் வழக்குப் பதிவு செய்த போலீசார், நம்பிராஜனின் தாய் சண்முகத்தாய் உள்பட 5 பேரை நாங்குநேரி காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், அவர்கள் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் ஆறுமுகம், சுரேஷ் கொலைக்குப் பழிவாங்கும் விதமாக, ஆறுமுகம் மற்றும் வான்மதி குடும்பத்தினர் தக்க சமயம் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

அதன்படி, ஆறுமுகம் மற்றும் வான்மதி குடும்பத்தினரைச் சேர்ந்த 12 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து, பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் நம்பிராஜன் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து உள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த நம்பியின் தாய் சண்முகத்தாயை சரமாரியாக அரிவாளால் வெட்டியும், வெடிகுண்டு வீசியும் கொலை செய்துள்ளனர். அதன் பிறகு கொலை வெறி தீராத நிலையில், சண்முகத்தாயின் தலையைத் துண்டாக வெட்டி எடுத்து அங்கிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும், பக்கத்துத் தெருவில் வசித்துவந்த சுப்பையா என்பவரின் மனைவி சாந்தியையும், வீடு புகுந்து வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் அந்த 12 பேர் கொண்ட கும்பல் மிகவும் கொடூரமாகக் கொலை செய்து விட்டுத் தப்பிச் சென்றது. 

பட்டப்பகலில் வீடு புகுந்து அடுத்தடுத்து 2 பெண்களைக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதி முழுவதும் பரவியதால், அங்கு கடும் அதிர்ச்சியையும், பதற்றமான சூழலும் நிலவியது. இதனையடுத்து, பதற்றத்தைத் தனிக்கும் விதமாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

மேலும், இந்த இரு பெண்களின் கொலை வழக்கு தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கொலை வழக்கில் தொடர்புடைய அந்த 12 பேர் கொண்ட கொலை கும்பலும், தங்களது செல்போன்களை அணைத்து வைத்துவிட்டு, தற்போது தலைமறைவாகி உள்ளது. இதனையடுத்து, அவர்களைத் தேடிப் பிடிக்கும் பணியில் போலீசார் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன், இந்த கொலைக்குப் பழி தீர்க்கும் விதமாக மேலும் கொலைகள் நடக்கலாம் என்று தகவல்கள் வெளியானதால், எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதனால், அந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.