கொட்டும் மழையிலும் முல்லைப் பெரியாறு அணைக்காக போராட்டம்! தமிழக - கேரள சாலை அடைப்பு.. எல்லையில் பதற்றம்...
5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பாக கொட்டும் மழையிலும் கேரள அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போராட்டக்காரர்கள் கேரளா செல்ல முற்பட்டதால் தமிழக - கேரள மலைப்பாதை போலீசாரால் அடைக்கப்பட்டதால், எல்லையில் பதற்றம் தொற்றிக்கொண்டது.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்பில் ஜான் பென்னிகுவிக் மணி மண்டபம் அருகே தான், தமிழகத்தைச் சேர்ந்த 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பாக கேரள அரசை கண்டித்து, கொட்டும் மழையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதாவது, கேரள அரசு முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டுவதற்குள் 139 அடியாக இருக்கும் போதே, அதன் தண்ணீரை அணையில் இருந்து வெளியேற்றியதை எதிர்த்தும், அணையில் இருந்து நீரை வெளியேற்றுவது குறித்தும் கேரள அமைச்சர்கள் தமிழக அதிகாரிகளை கலந்து ஆலோசிக்காமல் தண்ணீர் திறந்ததை எதிர்த்துமே இந்த கண்டன ஆர்ப்பட்டத்தை விவசாயிகள் நடத்தியிருக்கிறார்கள்.
அத்துடன், தமிழக அரசும் நீர் வளத்துறை அமைச்சகம் இணைந்து முல்லைப் பெரியாறு அணையின் முழு கட்டுப்பாட்டையும் தமிழக அரசின் கீழ் முழுமையாக எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 142 அடியாக நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கேரளா மாநிலம் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்த முற்பட்டார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட 5 மாவட்ட விவசாய சங்கத்தினர் கேரளாவிற்கு செல்ல முற்பட்ட போது, காவல் துறையினர் தமிழக - கேரள மலைப் பாதையை அடைத்து, போராட்டக்காரர்களை கேரளாவிற்கு செல்ல அனுமதிக்காமல் தமிழக எல்லையிலேயே தடுத்து நிறுவத்தினர். இதனால், தமிழக - கேரள மலைப் பாதை பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
அதே நேரத்தில், போராட்டக்காரர்களை உள்ளே அனுமதிக்காததால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட தொடங்கி, கேரள அரசை எதிர்த்தும், கேரள அமைச்சர்கள் முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டதை எதிர்த்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
முக்கியமாக, தமிழக விவசாயிகள் போராட்டம் செய்து கொண்டிருந்த போதே, அங்கு கொட்டி தீர்த்த கன மழையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, அங்கு கண்காணிப்புக்காக குவிக்கப்பட்டிருந்த காவல் துறை அதிகாரிகளும் கொட்டும் மழையில் நனைந்தபடியே போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தினர் .
குறிப்பாக, போராட்டத்தின் ஒரு பகுதியாக போராட்டக்காரர்கள் கேரளாவிற்கு செல்ல முற்படுவதை தடுப்பதற்காக ஏராளமான போலீசார் தமிழக - கேரள எல்லையான லோயர் கேம்பில் குவிக்கப்பட்ட தால், அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள தமிழக சாலை அடைக்கப்பட்டதால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.