உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகும்.
இந்நிலையில் நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. தற்போது மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இந்த போட்டியை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த போட்டியிலும், ஒவ்வொரு சுற்றிலும் மாடுபிடி வீரர்கள் வெவ்வேறு கலர் யூனிபார்ம் அணிந்து வந்து விளையாடுவார்கள். மதுரை, திருச்சி, கோவை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த காளைகள் இன்றைய ஜல்லிக்கட்டில் கலந்து கொள்கின்றன. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் உடல் நிலை குறித்து டெஸ்ட்டுகளை செய்ய டாக்டர்கள் குழுவினர் களத்தில் தயாராக உள்ளனர்.
மேலும் மாலை 4 வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும், சிறந்த காளைக்கு, காங்கேயம் பசுமாடும் பரிசாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தங்க காசுகள், கிரைண்டர், குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. மேலும் நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.